‘திருமணம்’ என்பது, ‘ஆயிரம் காலத்து பயிர்’ என்று தமிழ்நாட்டில் முன்னோர்கள் சொல்லிவந்தார்கள். ஆனால், எப்படியோ ‘ஆயிரம் பொய் சொல்லியாவது’ ஒரு கல்யாணம் நடக்கவேண்டும் என்ற சமுதாயத்துக்கு ஒவ்வாத ஒரு பழமொழியும் உலாவந்துவிட்டது. உடனடியாக அதையே பிடித்துக்கொண்டு, பொய்களின் அடிப்படையிலேயே பல திருமணங்கள் நடந்துவிடுகின்றன. படிப்பு, அந்தஸ்து, பொருளாதார நிலையில் பொய்சொல்லி திருமணம் செய்துகொண்டால்கூட, எப்படியும் இந்த பள்ளங்களையெல்லாம் நிரப்பிவிடலாம் என்ற நம்பிக்கையிலும், வாழ்க்கை துணைவர் காட்டும் அன்பிலும் மறந்து, வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து நடத்திவிடலாம். ஆனால், கடுமையான நோய்கள், திருமண வாழ்க்கைக்கு தகுதியற்ற நிலை இருந்தால் வாழ்க்கை படகை ஓட்டவே முடியாது. திருமணத்துக்கு முன்பு அவரவர் உடல்நிலைப்பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதையெல்லாம் மறைத்துவிட்டு, நடக்கும் திருமணங்களின் எண்ணிக்கை சமுதாயத்தில் அதிகமாகிவிட்டது.
சில நோய்கள் பெற்றோருக்கும், உற்றோருக்கும் நன்றாக தெரிந்தே இருக்கும். உயிரோடு இருக்கும்வரை மணவாழ்க்கையை அனுபவிக்கட்டும் என்ற எண்ணத்தில், பெண்ணுக்கோ, ஆணுக்கோ உள்ள நோய்களை, குறைபாடுகளை மறைத்து திருமணம் செய்துவிடுகிறார்கள். சிலர் கல்யாணம் முடிந்தால் சரியாகிவிடும் என்ற எண்ணத்தில் மனநோய் உள்ளவர்களையும் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை இப்படி ஏமாற்றி திருமணம் செய்துவைப்பதால், மணவாழ்க்கையும் ருசிப்பதில்லை. சில காலங்களில் அவர்கள் மரணத்தை தழுவவேண்டிய நிலை ஏற்படும்போது, ஆணுக்காவது பரவாயில்லை, அந்த பெண் விதவை என்ற பெயருடன் சமுதாயத்தில் பரிதாபமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது ஒருபக்கம் இருந்தாலும், இப்போது பல இளைஞர்களும், பெண்களும் தாங்கள் மணவாழ்க்கைக்கு தகுதியற்றவர்களாக இருக்கும் நிலையில், ஆண்களுக்கு ஆண்மைக்குறைவோ, பெண்களுக்கு இறுக்கமான நிலையோ இருந்தால், அவர்கள் தாம்பத்திய வாழ்க்கைக்கு தகுதி இல்லாதவர்கள் என்றாலும், வீட்டில் உள்ளவர்கள் திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யும்போது, அதைச் சொன்னால் சமுதாயத்தில் தங்களுக்கு அவமானம் வந்துவிடுமோ? என பயந்து சொல்லாமல் திருமணம் செய்துவிடுகிறார்கள். சிலர் எய்ட்ஸ் இருப்பதைக்கூட மறைத்துவிட்டு, திருமணம் செய்துவிடுகிறார்கள். இதனால் திருமணத்துக்கு பிறகு அடுத்தவர்கள் வாழ்க்கையை தாங்கமுடியாத கொடுமைக்கு உள்ளாக்கிவிடுகிறார்கள்.
இப்படி ஒரு நிலை யாருக்கும் வராமல் தடுக்க, ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன், தன் கணவன் ஆண்மைக்குறைவு என்பதை மறைத்துவிட்டு திருமணம் செய்துவிட்டார், ஒருநாள்கூட கணவன்–மனைவியாக வாழவில்லை என்று கூறி ஒரு இளம்பெண் திருமணத்துக்கு விவாகரத்து கேட்ட வழக்கில், நல்ல ஆலோசனையை மத்திய–மாநில அரசுகளுக்கு மட்டுமல்லாமல், சமுதாயத்துக்கும் வழங்கிவிட்டார். குடும்பம் என்பது சமுதாயத்தின் அடிப்படை அங்கமாகும். இதில் பங்குதாரர்களான கணவனோ, மனைவியோ சகஜமான நிலையில் இல்லாமல், அந்த குடும்பம் அமைந்துவிடுமானால், விளைவுகள் கடுமையானதாகவும், ஆபத்தானதாகவும் ஆகிவிடும். திருமண வாழ்க்கையின் ஆபத்தான பிரச்சினையும், சமூக பிரச்சினையும் என்னவென்றால், ஆண்களிடம் ஆண்மைக்குறைவும், பெண்களிடம் ‘இன்பிரிஜிடி’ என்ற இறுக்கமான நிலையும்தான். திருமணத்துக்கு முன்பு டாக்டர்களால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டால், ஆண்மைக்குறைவு உள்ளவர்களும், எய்ட்ஸ் போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களும் திருமணம் செய்யாமல் தடுத்துவிடமுடியும். இதுபோல, ஆண்மைக்குறைவு உள்ள ஆண்களாலும், தாம்பத்தியம் கொள்ளமுடியாத அளவு இறுக்கமுள்ள பெண்களாலும் திருமண பந்தம் தோல்வியடையும் நிகழ்வுகள் அதிகரித்துக்கொண்டே போவது, மத்திய–மாநில அரசுகளுக்கும் தெரியுமா?, இதுபோன்ற நிலையை தடுக்க திருமணத்துக்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டியது அவசியமில்லையா? என்று கேட்டு, மத்திய–மாநில அரசு துறைகள், சட்ட கமிஷனையும் பிரதிவாதிகளாக சேர்த்து, விசாரணையை செப்டம்பர் 5–ந் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார். இது, ஒட்டுமொத்த சமுதாயமும் வரவேற்கத்தக்க வேண்டிய, அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டிய நல்ல முடிவாகும். எப்படி திருமணப்பதிவு சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளதோ, அதுபோல திருமணத்துக்கு முன்பு மருத்துவ பரிசோதனையும் சட்டமாக்கப்படவேண்டும். இது சிகிச்சை அளித்து குணமாக்கப்படக்கூடிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும், இதுபோல குறைபாடுகளோ, மணவாழ்க்கைக்கு தகுதி இல்லாத நோய்களோ இருந்தால், அந்த திருமணத்தைத் தடுக்கவும் பெரிதும் உதவும். மருத்துவ பரிசோதனை, பலருக்கு மகிழ்வான வாழ்வுக்கு வழிவகுக்கும்.