29 Jan 2014

எனது சினிமா

உயிப்புடன் இருப்பதற்கும் உழைத்துக்கொண்டே இருப்பதற்கும் வித்தியாசம் இருக்குங்க.உழைப்பது பிழைப்பை ஓட்டவே என்றாலும் அதுவே 24 மணிநேரங்களை திண்ணும் போது உயிர்ப்புடன் இருப்பது என்பது பெருங்கனவு. கொஞ்ச நாளைக்கு முன்னால எனக்கொரு குழப்பம் வந்தது. நம்ப பீல்டுல எல்லாரும் இந்த ஓட்டம் ஓடறாங்களே. யாராச்சும் யாரையாச்சும் ஏறி மிதிச்சு முந்திக்கிட்டே இருக்காங்களே.. நான் அந்த இயக்கத்துல தான் இருக்கனா? இல்ல தன்முனைப்பே இல்லாம இருப்பதைக் கொண்டு மகிழ்ந்து அரைவேக்காடாக பொங்கித் தின்று வாழ்க்கையை ஓட்டறனான்னு. சரி இந்த சினிமா ரேஸ்ல நாமும் ஒரு தடவை ஓடித்தான் பார்ப்போம். பிடித்தால் அது இயல்பு. இல்லைன்னா முயற்சி செய்யலைங்கற குற்ற உணர்வாவது இல்லாம இருக்குமேன்னு முடிவு செஞ்சு தலை தெறிக்க ஓடுனேன் பாருங்க அப்படிஒரு ஓட்டம். சுத்தி என்ன நடக்குதுன்னு தெளியறதுக்குள்ள 10 வருசம் முடிஞ்சுருச்சு! இப்ப கண்ணை முழிச்சு பார்த்தா பொருளா பதவியா சிலது கெடைச்சிருக்கு. ஆனா அதுல ஓடுனத்துக்கான அர்த்தம்னு சொல்லிக்கிட பர்சனலா ஒன்னுமே இல்லை. இருக்கும் திறமைக்கும் தண்டிக்கும் ஆன்மாவை கலந்தடிக்கற மாதிரி ஒன்னு செஞ்சுட்டோம்னு சொல்லிக்கற மாதிரி ஒரு ஹரி Action திரைக்கதையோ இளையராஜா கிடார் நோட்ஸோ அல்லது ஒரு வண்ணதாசனின் கண்களில் நீர்தேக்கும் ஒரு சின்ன நிகழ்வை கதையாக்கும் வித்தையோ  போல ஒரு உன்னதத்தின் உச்சியை அடைய முடியாட்டாலும் அதை உணரும் முயற்சியாகவாவது இருந்திருக்கலாம். செய்தது எதுவுமே எனக்காகவோ அல்லது எனக்குள்ளாகவோ இல்லைங்கறது ஏமாற்றத்தினை மட்டுமே தருகிறது. செய்யும் தொழிலே தெய்வம்கறதுல மாற்று கருத்தில்லை. ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே உயிர்ப்பும் வேலையும் ஒரே இடத்தில் கிடைக்கிறது போல.


பிழைப்புவாதத்திற்காகவும் இன்னும் சொன்னால் கிடைக்கும் ஒரு எக்ஸ்ட்டா பூச்சியத்துக்காக மட்டுமே இன்னமும் இந்த துறையில் இருக்கிறேங்கறது தான் எனக்கு இப்போதைக்கு கிடைத்த தெளிவு. இதுல வருத்தப்படறதர்க்குஒன்னும் இல்லைன்னாலும் நமக்கே நமக்கான வாழ்வின் சில கணங்களை எதற்கோ எங்கனையோ சிதறவிட்டுட்டு இருக்கறது உண்மைதான் போல. சினிமாக்குள்ளான ஓட்டம் ஓடாமலேயே நமக்கான எல்லைகளையும் வாழ்க்கையும் வகுத்துக்கொள்ள முடியுங்கறதும் தெரியவந்த பொழுது வாழ்வில் எதற்கு முன்னுரிமை கொடுக்கனுங்கற லிஸ்டுல பயங்கர மாற்றம்! இழப்புகள் என்பது யாருக்காக என்பதைப் பொறுத்து அதன் மதிப்புகள் மாறித்தான் போகின்றன. மாறினால் தான் என்ன ஆகிவிடும்?


ஆகவே நான் ஓட ஓட ஓட ஓட்டம் என்னிக்கும் முடியாத ஓட்டப்போட்டியில் இருந்து நிதானிக்க போகிறேன்! ஆனால் எல்லா துறைகளையும் போலத்தான் எங்க பீல்டும்! கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கிட்டு இருந்தம்னா கூட ஓடற வேகத்துல நாலுபேருக்கு இங்கிட்டு ஒரு பொணம்னு ஒரு மெயில் தட்டி அதை நானூறு பேருக்கு பரப்பி ஓரமா ஒதுக்கி ஓய்ச்சிருவாய்ங்க. அதனால இனிமேலுங்காட்டி என் வாழ்வுக்கான மற்றும் குடும்பத்துக்கான நேரங்களிலும் தலைதெறிக்க ஓடாம ஆனா ஓடறமாதிரியே காலை மட்டும் ஆட்டிக்கிட்டு பிடிச்சதை செஞ்சு உயிப்புடன் வாழப்போறேன். என்னது பிடிக்குமா? அதைத்தான் தேடப்போறேன்! எங்கன தேடுவனா?! என் தமிழ் சினிமாவில் .....MaggiMohan stunt


26 Jan 2014

சாலை வழி உணவகம் Chenni to Madurai

இதை யார் கேட்பது.....? அண்மையில் சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்தில் மதுரைக்குப் பயணித்தேன். பஸ்ஸில் எனக்குப் பின்னால் கைக் குழந்தையுடன் ஓர் இளம் தம்பதி. பஸ் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏறக்குறைய அனைத்து பயணிகளும் தூங்க தொடங்கி விட்டனர். அந்த இளம் தம்பதி, குழந்தைக்கான மெத்தையை தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க வைத்தனர். நள்ளிரவில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது ஒரு மோட்டலில் (சாலை வழி உணவகம்) பஸ் நின்றது. அங்கே இருந்த ஒலிபெருக்கியில் பலத்த சத்தத்தில் ஒரு டப்பாங்குத்து பாட்டு கத்தியது. இருப்பினும், என்னைப் போன்ற ஒன்றிரண்டு பயணிகளைத் தவிர, யாரும் இறங்கவில்லை. மற்ற அனைவருமே நல்ல தூக்கத்தில் இருந்தனர். அந்த மோட்டலின் கல்லாவில் இருந்தவர், அவரின் அருகில் இருந்த ஒருவரைப் பார்த்து “போ’ என்றார். உடனே அந்த நபர் கையில் ஒரு காலி தண்ணீர் கேனை எடுத்துக்கொண்டு அந்த கேனால் பஸ்ûஸ ஓங்கி ஓங்கி தட்டியபடியே சுற்றி சுற்றி வந்தார். அவ்வளவுதான், நல்ல தூக்கத்தில் டம் டம் என்று தட்டும் சத்தம் கேட்டு அனைத்து பயணிகளும் வாரிச் சுருட்டி எழுந்தனர். தரையில் படுத்திருந்த குழந்தை வீறிட்டு அழும் சத்தம், கீழே அவர்கள் கதற விடும் பாட்டுச் சத்தத்தையும் மீறி கேட்டது. சரி, கீழே இறங்கி 1set பரோட்டா ஆர்டர சொன்னேன்் சாப்பிட்டு முடிந்து bill Rs100(குருமாவுக்கும்bill Tips அவர்களே எடுத்துக் கொண்டார்கள்)் ுஒரு டீ சாப்பிடுவோம் என்று நினைத்து “டீ எவ்வளவு’ என கேட்டேன். “பதினைந்து ருபாய்’ என்றனர். டீ குடிக்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு பிஸ்கெட் வாங்கலாம் என்று போனேன். தரமான நிறுவன பெயர்களில் ஒன்றிரண்டு எழுத்துகளை விழுங்கிவிட்டு அதே போன்ற பேக்கிங்கில் உள்ளூர் தயாரிப்பு பிஸ்கெட்களாக வைத்திருந்தனர்.உதாரணமாக, மில்க் பிக்கீஸ் என்பதற்கு பதில் மில்க் பிக்ஸ் என ஓர் ஆங்கில எழுத்தை தவிர்த்துவிட்டு, கம்பெனி பிஸ்கெட் போன்ற பேக்கிங்கில் விற்றனர். அதையும் வாங்க மனமின்றி யோசித்தபடி நின்றேன். அப்போது பஸ்ஸில் வந்த கைக்குழந்தையின்தந்தையான அந்த இளைஞர் கடைக்காரருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். “பஸ்ஸில் தட்டுவதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது? நான் போலீஸில் புகார் செய்வேன்’ என்ற ரீதியில் அவர் பேச… இவரைப்போல எத்தனையோ பேரை பார்த்துவிட்ட மிதப்பில் கடைக்காரர் பேச… இருவருக்கும் கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது. பிரச்னை அதிகரித்தால் பயணத்தில் சிக்கல் ஏற்படலாம் என்ற சுயநலம் தோன்றவே, அந்த இளைஞரைச் சமாதானம் செய்து பஸ்ஸில் ஏற்றி விட்டேன். சில நிமிடங்களில் பஸ் புறப்பட்டது. நடத்துநரிடம் பேசினேன். “உங்களுக்கு ஓசியில் உணவு கிடைக்கிறது என்பதற்காக இப்படி பயணிகளின் உயிருடன் விளையாடு கிறீர்களே” என்று நான் துவங்க… தொடர்ந்து ஒவ்வொரு பயணியும் சகட்டுமேனிக்கு ஓட்டுநரையும் நடத்துநரையும் வறுத்தெடுக்க துவங்கினர். சற்று நேரம் பேசாமல் இருந்த நடத்துநர் பேசத் தொடங்கினார்.“இவ்வளவு பேர் பஸ்சுல இருந்து இறங்கினீங்களே நாங்க என்ன சாப்பிட்டோம்னு பாத்தீங்களா…. வெறும் டீ தான் சாப்பிட்டோம். இங்க இருக்கற பொருள் எப்படி இருக்கும்னு எங்களுக்கு தெரியும். அதுனால இதுமாதிரி இடங்கள்ல நாங்க சாப்பிடவே மாட்டோம்… அப்புறம் ஏன் நிறுத்துறோம்னு அடுத்த கேள்வி கேப்பீங்க… இங்க நாங்க நிறுத்தலேன்னா எங்களுக்கு மெமோ கொடுப்பாங்க… காரணம் என்னன்னு நீங்களே புரிஞ்சுக்கங்க’ என்றார்… அவர் தரப்பில் இருக்கும் நியாயம் புரிந்தது. ஆனால், என் மனதில் பல கேள்விகள் எழுந்தன. தூங்கும் பயணிகளை எழுப்ப காலி டப்பாவால் பஸ்ûஸ தட்டும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது? ஒரு நிறுத்தத்தில் பஸ்ûஸ விட்டு பயணிகள் இறங்கும் முன் பஸ் புறப்பட்டால் ஓட்டுநரை எச்சரிக்கும் விதத்தில் ஒரு பயணி லேசாக கையால் பஸ்ûஸ தட்டினாலே கோபித்துக் கொள்கிற ஓட்டுநரும் நடத்துநரும் இந்த நபர் காலி பாட்டிலால் தொடர்ந்து சத்தமாக தட்டுவதை தங்கள் மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லலாமே… உணவகத்தை யார் வேண்டுமானாலும் நடத்தட்டும். நியாயமான விலையில் உணவையும் பொருள் களையும் தரமாக கொடுக்கலாமே. ரயில் நிலையங்களில் உள்ளது போல, இதுபோன்ற உணவகங்களிலும் விலை, எடை போன்றவற்றை முறைப் படுத்தலாமே. உணவுப் பொருள் தரம், போலி தயாரிப்புகள் தடுப்பு, தரக் கட்டுப்பாடு என விதவிதமான அரசுத் துறைகள் இருந்தும் அவற்றின் பார்வையில் இந்த மோட்டல்கள் படவில்லையா?… இப்படி பல கேள்விகள்… எல்லாமே விடையில்லா வினாக்கள். தகவல் முடிந்த வரை SHARE செய்யுங்கள்..... அரசு இதை கவனிக்கட்டும்...

குட்டிஅண்ணன் ஜம்ப்்

தொட்டால் தொடரும் -குட்டியண்ணன் ஜம்ப்ஒரு வண்டிக்கு குறுக்கே இன்னொரு கார் நுழையுது. அதைப் பார்த்த வண்டிக்காரன் சடன் ப்ரேக் அடிக்கிறான். அது ஸ்கிட் ஆகி அப்படியே வண்டி மேல இடிச்சி பறந்து போய் விழுது. இப்படி எழுதும் போதும், சொல்லும் போது சுலபமாய் இருக்கும் விஷயம் காட்சிப் படுத்தும் போது சுலபமாய் இருப்பதில்லை. அப்படி இருக்காது என்று  கேட்டு, பார்த்தறிந்திருந்தாலும் அதை நாமே நம் படத்திற்காக செய்யும் போது புதிய அனுபவமாய்த்தான் இருக்கிறது.

பறக்கப் போகிற வண்டியைப் பொறுத்துதான் அந்த காட்சிக்கான பட்ஜெட்  அதிலிருந்து ஆரம்பிக்கிறது. நம் கனவை நினைவாக்க போராடும் போராட்டம். இந்த இடத்தில் தான் ஒரு தயாரிப்பாளர் மீதான மரியாதை அதிகமாகிறது. சுமோன்னா ஒரு விலை. ஸ்கார்பியோன்னா ஒரு விலை, குவாலிஸ்னா ஒரு விலை இப்படி விலையைப் பார்த்து வண்டியைக் கவிழ்ப்போம்னு நினைச்சிட்டிருந்தா நேரத்தில தயாரிப்பாளர் “இதோ பாருங்க சங்கர். வண்டில போறது அமைச்சர். ஒரு அமைச்சர் என்ன வண்டியில போனா சரியாயிருக்கும்னு யோசிக்கிறீங்களோ அந்த வண்டியில போனாத்தான் நம்பிக்கை வரும். அதனால யோசிக்காதீங்க.. சரியான வண்டியை செலக்ட் செய்யுங்க” என்று உடனிருந்தார். நம் கனவை நனவாக்கும் ஆதரவு.

 அப்படியென்ன இது பெரிய விஷயம்? எல்லா படங்களிலும் நடப்பதுதானே? 50 வருஷமா நடக்கிற விஷயம் இதை பெருசா சொல்ல என்ன இருக்கு? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.  எனக்கும் அப்படித்தான் தோன்றியது. எத்தனையோ படங்களில் பதியப்பட்ட காட்சிதானே இதில் என்ன பெரிய டென்ஷனென்று. வண்டி ஜம்ப்புக்கான ரன்வே ரெடியாகிவிட்டது. வண்டியை ஓட்டப்போகும் குட்டியண்ணனை மாஸ்டர் நாக்கவுட் நந்தா அறிமுகப்படுத்தினார். அகண்ட தோள்களுடன் இருந்தார். பார்க்க கரடு முரடாய் இருந்தாலும் பேச்சில் குழந்தைத்தனம் இருந்தது. 
“அண்ணே.. லெப்டுல ஜிம்மில ஒரு எம்.எக்ஸ். இங்க ஒரு எபிக், ராம்புக்கு கீழே ஒரு கோ ப்ரோ. எதிர்ல வர்ற கார்ல ஒரு 5டி, அது தவிர ஒரு கோ ப்ரோ உங்க வண்டிக்குள்ள” என்று சொல்ல.. “அண்டர் டேக்கன் “ என்றார் குட்டியண்ணன். புரிஞ்சிக்கிட்டாராம். ராம்ப் கடகடவென அடிக்க ஆரம்பித்தார்கள். இதன் நடுவில் அவர் ஸ்கார்பியோ காரை எடுத்து ஒரு நாலு வாட்டி ரன் வேயில் ஓட்டினார். டெஸ்ட் ரைடே80 கி.மீ ஸ்பீட். எல்லா கேமராக்களையும் பிக்ஸ் செய்யப்பட்டது. ஆயிரத்திற்கும் மேலான மக்கள் கூட்டம் வேறு சேர்ந்ததுவிட, எல்லார் முகத்திலும் ஆர்வம் அதிகமான காணப்பட்டது.  குட்டியண்ணன் பதட்டமில்லாமல் இருந்தார்.

”இது மாதிரி எத்தனை ஜம்ப் பண்ணியிருக்கீங்கண்ணே?”

“அது நிறைய சார். என்றபடி தன் கையில் உள்ள ஒரு குட்டி செல் போனில் ஒரு வீடியோவை காட்டினார். அதில் இரண்டு கார்கள் தலைக்குப்புற விழுந்து பல்டியடித்துக் கொண்டிருந்தது. “இரண்டாவது கார்ல நான் தான் இருந்தேன்” என்றார் பெருமையாய். வீடியோவை பார்த்துவிட்டு நிஜத்தில் அதனுள் இருந்த ஆளைப் பார்க்கையில் லைட்டாய் ஜெர்க்காகத்தான் செய்தது.

“இது வரைக்கும் எத்தனை ஜம்ப் பண்ணியிருப்பீங்கண்ணே?

“சரியா ஞாவகமில்லை. 60-70 இருக்கும்”

“பெருசா அடி ஏதும் பட்டதில்லையில்லை?

“அது இல்லாமய.. உடம்பு பூராவும் உள் காயமா நிறைய இருக்கும். கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு ஓட்ட வேண்டியதுதான். உனுக்கு ஒண்ணு தெரியுமா எங்களூக்கு எல்லாம் மெடிக்கல் இன்சூரன்ஸ், லைஃப் இன்ஸூரன்ஸ் ஏதும் கிடையாது. தெரியுமா?” என்றபோது அவர் குரலில் வருத்தமேயில்லை. பெருமைதான் இருந்தது. இதெல்லாம் இல்லாமயே இப்படியெல்லாம் செய்யுறோம் பாத்தியா என்ற பெருமை.

“வண்டியில ஏறச் சொல்ல என்னா நினைப்பீங்க?”

“ஒண்ணியும் நினைக்க மாட்டேன். நினைச்சா.. வண்டி ஒழுங்கா ராம்புல ஏறாது”

“வண்டிய ரன்வேல ஓட்டிட்டேன்னா அவ்வளவுதான். ஃபீனீஷ். அதுக்கப்பால ரன்வேல ஒரு சைடா, ஏத்தும் போது கண்ணை மூடிக்குவேன். அதுக்கப்புறம் என்ன நடந்தாலும் நம்ம கையில இல்லை. என்று மேலே கையைக் காட்டினார். ஒரு முறை ஸ்பீடாய் வண்டி ஓட்டி பேலன்ஸ் போய் சிராய்ப்பு வாங்கியதிலிருந்து மழைக்காலங்களில் ஸ்பீடாய் வண்டியோட்ட இன்றும் யோசித்துக் கொண்டிருக்கும் என்னை நினைத்து பார்க்கையில் அபத்தமாய் இருந்தது. வீழ்ந்தால் என்னவாகும் என்று தெரிந்தே மறுபடியும் மறுபடியும் விழும் வேலை செய்யும் அவரை பார்க்க ஆச்சர்யமாய் இருந்தது.

நந்தா மாஸ்டர், கேமராமேன் ஆம்ஸ்ட்ராங், என்னை, தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர், குட்டியண்ணனை ராம்புக்கு முன்னால் நிற்க வைத்து எலுமிச்சை பழம் சுற்றிய போது வயிற்றுக்குள் சுர்ரென அமிலம் ஊறியது. அதுவரை எனக்குள் எல்லா கேமராவிலேயும், சரியா விழணும். எத்தனை ஷாட் கிடைக்கும். கேமரா ஆங்கிள் வச்ச இடத்தில சரியா வண்டி விழணும்னு இப்படியெல்லாம் மட்டுமே யோசித்துக் கொண்டிருந்த என் நினைப்பில் சட்டென “அப்பா பெரியாண்டவனே.. குட்டியண்ணனுக்கு ஏதும் ஆகாம நல்ல படியா எழுந்து வரணும் என்று தோன்றியது. மாஸ்டரில் ஆரம்பித்து, ஒவ்வொருவராய் குட்டியண்ணனை கட்டி அணைத்து “நல்லா வாங்கண்ணே” என்று வாழ்த்தும் போது கண்ணீர் மல்கி எங்கே அழுதுவிடுவேனோ என்று தோன்றியது. அண்ணன் எந்த விதமான உணர்வும் இல்லாமல் எல்லோரிடமும் கை கொடுத்துவிட்டு, சட்டென வண்டியில் ஏறி உட்கார்ந்து ரன் வேயின் அடுத்த முனைக்கு கிளம்பினார்.  கிளம்பிய அடுத்த நொடியில் எல்லார் உடலிலும் பரபரப்பு தொற்றிக் கொள்ள, ஆர்ம்ஸ்ட்ராங், எல்லா கேமராக்களையும் சரியாக பிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறதா? என்று ஒன்றுக்கு மூன்று முறை செக் செய்துவிட்டு “ரெடி மாஸ்டர் “ என்று வாக்கியில் கத்த, மாஸ்டர் குட்டியண்ணுக்கு அருகில் இருந்த அஸிஸ்டெண்டுக்கு “ரெடி ரோட் கிளியர் வண்டி கிளப்புங்க.. ஆக்‌ஷன்” என்று கத்த, ஆயிரம் பேர் இருந்த இடத்தில்  மூச்சுவிடும் சத்தத்தை தவிர வேறேதுமில்லை.  “வண்டி ஸ்டார்ட் ஆயிருச்சு” என்று வாக்கியில் பதில் வந்ததும் எல்லார் கவனமும், வண்டி வரும் திசையிலேயே இருக்க,  தூரத்தில் வெகு வேகமாய் ஒரு கார் வரும் சத்தம் மெல்ல கேட்க, கிட்டே வர வர, அதன் சத்தம் அதிகமாக பீல்டில் எட்டிப்பார்த்த மாஸ்டர் வண்டி வந்திருச்சு என்று கத்திக் கொண்டே மறைவிடத்தை நோக்கி ஓட, ஐந்து கேமராக்கள் ஒரே நேரத்தில் சுழல, பெரும் சத்தத்துடன் வந்த வண்டி, ராம்பின் மேல் டம்மென்ற சத்தத்துடன் மோதி ஏறி, சட்டென அந்தரத்தில் ஒரு சுழன்று சுழன்ற வேகத்தில் தரையில் நெட்டுக்குத்தாய் சட்டென குத்தி, எக்குத்தப்பாய் மறுப்பக்கம் சுழன்று தரையில் மோத, எதிர் திசையில் 5டியை முகத்தில் கட்டிக் கொண்டு வந்த குவாலிஸ் ட்ரைவர் தன் கார் மீது மோத இருந்த குட்டியண்ணன் வண்டியை படு நேக்காய் தவிர்த்து, காரில் இருந்த படி “ஆஆஆஆஆஆஆஆஆஆய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்” என்று பெருங்குரலெடுத்து கத்தியபடி குட்டியண்ணனின் வண்டியை அரைவட்டமடித்து ஸ்கிட்டோடு தன் கேமராவை மீண்டும் குட்டியண்ணனின் வண்டியை நோக்கி திருப்ப ஸ்கிட் செய்து புழுதி பரக்க நிறுத்திய விநாடி, குட்டியண்ணனின் வண்டியும் நின்றது. சடுதியில் நடந்துவிட்ட இத்தனை நிகழ்வுகளில் ஆச்சர்யத்தையும்  தாங்க முடியாமல் மொத்த கூட்டமும் அதே அமைதியுடன் இருக்க, சட்டென ரிலாக்சான குழு ஆட்கள் குட்டியண்ணனின் வண்டியின் அருகே ஓடினார்கள்.

உள்ளேயிருந்த அண்ணணை உடைந்த கண்ணாடிகளூக்கிடையே விலக்கி, மெல்ல தன் உடலில் இருந்த பேட் எல்லாவற்றையும் விலக்கி மெல்ல கண் விழித்து சிரித்தபடி எழ,  குட்டியண்ணன் ஸேஃப். எல்லார் முகத்திலும் மகிழ்ச்சி. விழுந்த அதிர்ச்சி, ஆச்சர்யம் எல்லாவற்றையும் மீறி எல்லா கேமராக்களிலும் ஒழுங்காய் பதிவாயிருக்கிறதா என்று பார்க்கும் ஆர்வம் மிக, அண்ணனை கட்டியணைத்துவிட்டு, அதற்கு ஓடிவிட்டேன். என்னா ஒரு சுயநலமி நான் என்று என்னையே நொந்து கொண்டேன். எல்லாம் முடிந்து அடுத்த காட்சிக்கான விஷயங்களை லைட் போவதற்கு எடுக்க நானும், ஒளிப்பதிவாளரும் நகர, தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர் குட்டியண்ணனை அழைத்தார். கட்டியணைத்து  பாராட்டை தெரிவித்துவிட்டு, சட்டென தன் பாக்கெட்டில் கையைவிட்டார். கையை வெளியே எடுத்த போது அதில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று எண்ணிப் பார்க்கக் கூட இல்லை. அப்படியே குட்டியண்ணனிடம் கொடுத்துவிட்டு, நகர்ந்துவிட்டார்.  ஒழுங்காய் பேட்டாவே கொடுக்காத தயாரிப்பாளர்கள் மத்தியில் சம்பளத்திற்கு மேல் பரிசு கொடுத்து கவுரவிக்கும் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகரைப் போன்ற மனிதர்களை  காண்பதறிது.

கேபிள் சங்கர்

25 Jan 2014

நடிகர்கள்லும் நனும்

நடிகர்கள் , அதுவும் குறிப்பாக நடிகைகள் குறித்து எனக்கு நிறைய மரியாதை உண்டு. சின்னவயதில் " டேய் சூப்பரா நடிச்சிருக்காண்டா ரஜினி"  என்ற அளவில் பேசித் திரிந்துள்ளேன். மரியாதை என்பது கற்றுத்தரப்படவில்லை என்பதைவிட பால்காரன், வேலைக்காரன் என்ற அளவில் சினிமா நடிகர் நடிகைகளையும் ஒருமையில் அழைக்கும் நோய் அதுவாகவே எனக்கும் வந்து சேர்ந்து இருந்தது. எனக்கு மட்டும் அல்ல என் வயதினர் அனைவரும் அப்படியே. 

கல்லூரி காலங்களில்கூட அந்த நோய் இருந்தது. எப்போது மாறினேன் என்று தெரியவில்லை. நடிகர் நடிகர்களை மரியாதையுடன் அழைக்க / பேச வலிந்து மாற்றிக்கொண்டேன். எனக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்து அவர்கள் படம் பார்க்க ஆரம்பித்தவுடன் , நடிகர் நடிகைகளை மிகவும் மரியாதையாக‌ அறிமுகம் செய்து வைத்தேன். குழந்தைகளுக்கு வடிவேல் மிகவும் பிடிக்கும். வடிவேல் / விஜய் நகைச்சுவைக்காட்சிகள் அதிகம் பிடிக்கும். அபப்டி அவர்கள் அந்தக் காட்சிகளைப் பார்க்கும் நேரத்தில் "இவர்தான் வடிவேல் அங்கிள். இவருக்கும் குடும்பம் உள்ளது. மனைவி, குழந்தைகள் உள்ளார்கள். அப்பா வேலை செய்வதுபோல இவர் நடிக்கும் வேலை செய்கிறார்."  என்ற அள‌வில் அறிமுகம் இருக்கும்.

நடிகைகள் என்றால்... "இந்த ஆண்டி அப்பா கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்து நடிக்கிறார். இவருக்கு குழந்தைகள் உள்ளார்கள். (குழந்தைகளின் பெயர்கள் தெரிந்து இருந்தால் அவையும் சொல்லப்படும்) அப்பா இவருக்கு இரசிகராக இருந்தேன். நன்றாக நடனம் ஆடுவார்" என்ற அளவில் இருக்கும். கமலின் குழந்தைகளை யார் என்றும் சொல்லி உள்ளேன்.

Shakira - Hips Don't Liஎ குடும்பத்துடன் அடிக்கடி பார்ப்போம்.... அப்போதும் அதில் நடனம் ஆடும்  Shakira  அழகு, நளினம் வெளிப்படையாக பேசப்படும். அந்தப் பாட்டு பண்பலையில் வந்தால் அப்பா உங்க பாட்டு என்று சொல்லிவிடுவார்கள் குழந்தைகள்.  

Taylor Swift எப்படி இளமைக் காலத்தில் இருந்து பாடல்களில் ஆர்வம் காட்டி கடின உழைப்பில் முன்னேறினார் என்பது போன்ற  ஆவணப்படங்களும் பார்ப்பது உண்டு. பொழுதுபோக்கு ( திரைப்படம், தொலைக்காட்சி, ...)  உலகத்தில் இருப்பவர்கள் இரத்தமும் சதையுமான மனிதர்கள் என்பதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பேன் குழந்தைகளிடம்.

இதையெல்லாம் குழந்தைகளுக்குச் சொல்வதன் காரணம்..... நடிகர்/நடிகைகளின் புற அழகு / குரல் / நடனம் இரசிக்கப்பட்டாலும் அது அவர்கள் திரையில் செய்யும் ஒரு தொழில்/வேலை தானே தவிர , அவர்களுக்கும் குடும்பம் உள்ளது.  திரை வாழ்க்கைக்கும் நிச வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது அவர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக‌.