28 May 2014

மோடி!இந்தியாவின் 15வது பிரதமரானார் ,45 உறுப்பினர்களுடன் புதிய அமைச்சரவை துவக்கம்

மோடி! : இந்தியாவின் 15வது பிரதமரானார் மோடி: 'நிறைந்த நிர்வாகம்' கோஷத்துடன் பதவியேற்பு: 45 உறுப்பினர்களுடன் புதிய அமைச்சரவை துவக்கம்தினமலர் – தி, 26 மே, 2014
புதுடில்லி: நாடே வியக்கும் வகையில், லோக்சபா தேர்தலில், பாரதிய ஜனதா கட்சிக்கு, அமோக வெற்றியைப் பெற்றுத் தந்த, நரேந்திர மோடி, சிறிய அரசு, நிறைந்த நிர்வாகம் என்ற கோஷத்துடன், நாட்டின், 15வது பிரதமராக நேற்று பதவியேற்றார். அவருடன் அமைச்சர்கள், 45 பேரும் பதவியேற்றனர். இவர்களில், 23 பேர் கேபினட் அமைச்சர்கள்; 10 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள்; 12 பேர் இணை அமைச்சர்கள். தமிழகத்தைச் சேர்ந்த, பொன். ராதாகிருஷ்ணனுக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை அடுத்து, அந்தக் கட்சி சார்பில், 16வது லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களின் கூட்டம், சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பா.ஜ., பார்லிமென்ட் கட்சித் தலைவராக, நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். அதன்பின், கடந்த சில நாட்களாக, மத்தியில் ஆட்சி அமைப்பது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்றன. இந்த ஆலோசனைகளின் இறுதியாக, மத்திய அமைச்சரவையில் இடம் பெற உள்ள அமைச்சர்களின் பட்டியல், நேற்று மதியம், ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, ஜனாதிபதி மாளிகையில் உள்ள வளாகத்தில் நேற்று மாலை, 6:00 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நாட்டின், 15வது பிரதமராக, நரேந்திர மோடி பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதையடுத்து, பா.ஜ., தலைவர், ராஜ்நாத் சிங், அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களான, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
அத்துடன், கர்நாடக பா.ஜ., மூத்த தலைவர்களான சதானந்த கவுடா, அனந்தகுமார், பீகாரைச் சேர்ந்த ராதா மோகன் சிங், டில்லி மாநில பா.ஜ., தலைவரான, ஹர்ஷ வர்த்தன், ஒடிசாவைச் சேர்ந்த, ஜுயல் ஓரம், ம.பி.,யின் தாவர்சந்த் ஹெலாட், உ.பி.,யைச் சேர்ந்த கல்ராஜ் மிஸ்ரா ஆகியோரும் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். பெண் அமைச்சர்களாக, சுஷ்மாவை தவிர, ம.பி., முன்னாள் முதல்வர் உமா பாரதி, ராஜ்யசபா முன்னாள் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா, நேரு குடும்பத்தைச் சேர்ந்த மேனகா, பா.ஜ., மகளிர் அணி முன்னாள் செயலரும், உ.பி., மாநிலம் அமேதி லோக்சபா தொகுதியில், காங்., துணைத் தலைவர் ராகுலை எதிர்த்துப் போட்டியிட்டவருமான, ஸ்மிருதி இரானி, பஞ்சாபின் சிரோன்மணி அகாலிதளத்தைச் சேர்ந்த, ஹர்சிம்ரத் கவுர் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். பா.ஜ., கூட்டணி கட்சிகள் சார்பில், பீகாரின் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர், ராம்விலாஸ் பஸ்வான், மகாராஷ்டிராவின் சிவசேனா கட்சியைச் சேர்ந்த, ஆனந்த் கீதே, ஆந்திரா தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த, அசோக் கஜபதி ராஜு ஆகியோரும் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதையடுத்து, தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக, முன்னாள் ராணுவ தளபதி, வி.கே.சிங், சந்தோஷ் கேங்வார் (ம.பி.,), ஸ்ரீபத் நாயக் (கோவா), தர்மேந்திர பிரதான் (ஒடிசா), சர்பானந்த சோனேவால் (அசாம்), பிரகாஷ் ஜாவடேகர் (மகாராஷ்டிரா), பியூஷ் கோயல் (மகாராஷ்டிரா), ஜிதேந்திர சிங் (ம.பி.,), நிர்மலா சீதாராமன் (தமிழகம்), ராவ் இந்தர்ஜித் (அரியானா) ஆகியோர் பதவியேற்றனர். இதன்பின், இணை அமைச்சர்கள் பதவியேற்பு நடந்தது. அதில், 12 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
சித்தேஸ்வாரா (கர்நாடகா), மனோஜ் சிங் (உ.பி.,), நிகல்சந்த் (ஜார்க்கண்ட்), உபேந்திர குஷ்வா (பீகார்), பொன்.ராதாகிருஷ்ணன் (தமிழகம்), கிரண் ரிஜ்ஜு (அருணாச்சல பிரதேசம்), கிரிஷன் பால் குஜ்ஜார் (அரியானா), சஞ்சீவ் குமார் பாலியான் (உ.பி.,), மன்சுக்பாய் வாசவா (குஜராத்), ராவ்சாகேப் தாதாராவ் (மகாராஷ்டிரா), விஷ்ணுதேவ் சகாப் (சத்தீஸ்கர்), சுதர்ஷன் பகத் (ஜார்க்கண்ட்) ஆகியோர் இணை அமைச்சர்களாக பதவியேற்றவர்கள். பதவியேற்பு விழாவில், பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்?ஷே உட்பட, சார்க் நாடுகளின் தலைவர்களும், காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட, ஏராளமானோர் கலந்து கொண்டனர். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 77 பேர் அமைச்சர்களாக பதவி வகித்தனர். ஆனால், நேற்று பதவியேற்ற, மோடி தலைமையிலான அமைச்சரவையில், அவரை தவிர்த்து, 45 பேர் மட்டுமே அமைச்சர்களாக பதவியேற்றுஉள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று பதவியேற்ற, 45 அமைச்சர்களில், ஏழு பேர் பெண் அமைச்சர்கள். அவர்களில், ஆறு பேர் கேபினட் அமைச்சர்கள். இணை அமைச்சர்களில், நிர்மலா சீதாராமன் ஒருவர் மட்டுமே பெண் அமைச்சர். இவரும், லோக்சபா மற்றும் ராஜ்யசபா என, எந்த சபையிலும் உறுப்பினராக இல்லை. பா.ஜ., தகவல் தொடர்பாளராக பணியாற்றி வந்தார். திருச்சியில் பிறந்த இவர், தற்போது டில்லியில் வசிக்கிறார். தற்போது வெளியாகியுள்ளது உத்தேச இலாகா பட்டியல் தான். இதில், மாற்றமும், விரிவாக்கமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
உ.பி.,க்கு முக்கியத்துவம்: மே.வங்கம், கேரளாவுக்கு நோ: @@மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில், உ.பி.,க்கும், மகாராஷ்டிராவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உ.பி.,யில், 71 தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பேர், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், உமா பாரதி, கல்ராஜ் மிஸ்ரா, மேனகா, வி.கே.சிங், சந்தோஷ் கன்வார், சஞ்சீவ் குமார், மனோஜ் சின்கா ஆகியோர் உ.பி., மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள். உ.பி.,க்கு அடுத்தபடியாக, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆறு பேர், அமைச்சர் களாகியுள்ளனர். நிதின் கட்காரி, கோபிநாத் முண்டே, ஆனந்த் கீதே, பிரகாஷ் ஜாவடேகர், பியூஷ் கோயல், ராவ் சாகேப் தன்வே ஆகியோர், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். இதற்கு அடுத்தபடியாக, பீகார், மத்திய பிரதேசம், கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த, தலா நான்கு பேருக்கும், குஜராத்தில், மூன்று பேருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஒடிசா, ராஜஸ்தான், டில்லி, ஜம்மு - காஷ்மீர், ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், கோவா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், தலா, ஒருவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், கேரளா, நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், இமாச்சல், உத்தர கண்ட், சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில், ஒருவருக்கு கூட அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment