9 May 2014

குழந்தைகள் என்ன பந்தயக்குதிரைகளா?

வணக்கம் நண்பர்களே மீண்டும் ஒரு குழந்தைகளுக்கான பதிவின் வழியே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய பதிவு நம் செல்லகுழந்தைகளை பந்தயகுதிரைகளாய் மாற்றுவதை பற்றி விரிவான அலசல்.வாழ்க்கையின் ஓட்டத்தில் இன்று நாம் எல்லோரும் பரபரப்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் ஓடிக் கொண்டிருக்கும் அனைவருமே ஓட்டத்தின் முடிவில் வெற்றி பெறுவார்கள் என்று சொல்வதற்கில்லை.பள்ளியில், கல்லூரியில் படிக்கும் தங்கள் குழந்தைகள் எவ்வாறு தேர்வு எழுதினார்கள், எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றனர் என்ற ஒரே சிந்தனை பெற்றோர்களுக்கு. ஒவ்வொரு தடவையும் முந்தைய தேர்வில் வாங்கிய மதிப்பெண்ணை விட அதிக சதவீதம் தங்கள் குழந்தைகள் பெற வேண்டும் என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் இன்றைய பெற்றோர்களை வாட்டி வதைக்கிறது.
தங்கள் பெற்றோர்களின் விருப்பப்படி அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணம் மாணவ, மாணவிகளும் கடுமையாக உழைத்து படித்துப்படித்து ஓய்ந்து போகின்றனர். எதிர்பார்த்ததை விட குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் பட்சத்தில் தங்களுக்கு உண்டாகும் கவலையை பற்றித்தான் மாணவ, மாணவிகள் பயப்படுகின்றனர். பலர் தூக்கத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் இழந்து தவிக்கின்றனர்.*தங்கள் குழந்தைகளிடம் இருந்து கல்வியில் நல்ல சாதனையை பெற்றோர்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை. அதற்காக தங்களின் கடந்தகால கல்விச் சாதனையை அறவே மறந்து விட்டு தங்கள் குழந்தைகள் மட்டும் தேர்வில் மதிப்பெண்கள் பெறுவதில் உயரத்தை எட்டிப் பிடிக்க வேண்டும். அதுவும் ஒரு தடவை கூட குறைந்து விடாமல் ஏறுமுகமாகவே இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைப்பதில் நியாயமே இல்லை*.
இன்றைய உலகம் கடும் போட்டிகள் நிறைந்தது தான். கல்வியில் சாதனை புரிபவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பும், வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்பதும் நிஜம்தான்.அதற்காக தங்கள் குழந்தைகளை பந்தய குதிரைகளாக பாவித்து காலாண்டுத்தேர்வில் எழுபது சதவீத மதிப்பெண் எடுத்தாய், அரையாண்டில் அவசியம் எண்பது சதவீதம் எடுக்க வேண்டும், இறுதியாண்டுத் தேர்விலோ தொன்னூறு சதவீதத்திற்கு கீழ் குறையவே கூடாது என்று பெற்றோர்கள் கண்டிப்போடு கட்டளையிடுவது ஆரோக்கியமான செயலல்லவே.

பெற்றோர்கள் தங்கள் வம்சத்தின் இயலாமையை தங்கள் குழந்தைகள் அவர்களது இளம் பருவத்திலேயே முறியடித்துக் காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை இறுக பிடித்து கொள்வது விவேகமானது. தங்கள் குழந்தைகள் நன்கு படிப்பதற்கு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்து அவர்களுக்கு படிப்பில் உற்சாகம் ஏற்படும் வண்ணம் ஊக்கப்படுத்தினாலே
 போதும்.அதன் பிறகு தங்கள் குழந்தைகள் நன்கு படித்து எடுக்கும் மதிப்பெண்கள் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனோபக்குவத்தை பெற்றோர்கள் பெற வேண்டும். வாழ்க்கையில் வெற்றி என்பது பாடபுத்தகங்களுக்குள் மட்டுமே இல்லை. மதிப்பெண்கள் மட்டுமே உயர்நிலை அடைவதற்கு மார்க்கம் ஆகிவிடாது.

தேர்வில் ஏற்படும் ஓரிரு தோல்விகள் மட்டுமே மனித வாழ்க்கைக்கு முடிவுரை எழுதிவிட முடியாது. வாழ்வில் உயர்ந்து, பிறரோடு இணைந்து மகிழ்வோடு வாழ்வதற்கு மதிப்பெண்களை தாண்டி சில விஷயங்கள் உண்டு.தன்னம்பிக்கை, துணிவு
, நன்னடத்தை, நல்ல குணாதிசியங்கள் இவைகளோடு கல்வியில் சாதனையும் சேரும் போது வெற்றி வீடு தேடி வரும் என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. படிப்பறிவோடு செயல் ஆற்றலும், வாழ்க்கையை எதிர் கொள்ளும் துணிச்சலும் தான் ஒரு ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். 

மாணவ, மாணவிகளை பந்தய குதிரைகளாக பாவிப்பதை பெற்றோர்கள் கைவிட வேண்டும். நம் பாசமிகு செல்வங்கள் மீது அளவுக்கு அதிக சுமையை ஏற்ற வேண்டாம்.அவர்களை *இயல்பாக வாழவிடுங்கள். இயந்திரமாக அல்ல. சுதந்திரமாக வாழவிடுங்கள். அடிமையாக அல்ல. பாசத்தையும், பந்தத்தையும் புறம்தள்ளும் குதிரைப் பந்தயம் இனி நமக்கு வேண்டவே வேண்டாம்.

No comments:

Post a Comment