25 Jun 2014

வாகனத்துக்கு பேன்சி எண் பெற கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும்?

வாகனத்துக்கு பேன்ஸி எண் பெற கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும்?
இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 2 ஆயிரமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு அதன் மதிப்பு நான்கு லட்சம் ரூபாய் வரை இருந்தால் ரூ.10 ஆயிரமும், நான்கு லட்சத்துக்கும் மேல் வாகன மதிப்பு இருந்தால் ரூ.16 ஆயிரமும் கட்டணமாக செலுத்த வேண்டும்.
மொத்தமுள்ள 98 பேன்ஸி எண்களில் ஆங்கில அகர வரிசைப்படி ஏ, பி, சி, டி என்ற வரிசையில் எண்கள் ஒதுக்கினால் ரூ. 40 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கு அடுத்து வரும் சீரியல்களில் எண்கள் ஒதுக்க ரூ. 60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம்வரை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். இந்த 98 எண்களையும் யாரும் கேட்கவில்லை எனில், அடுத்துவரும் ஆங்கில அகர வரிசை சீரியலில் ஒதுக்கப்படும் எண்களோடு சேர்த்து வாகனங்களுக்கு வழங்கப்படும்.

வாடகைக்கு இயக்கும் வாகனங்கள், சொந்த வாகனங்களை எவ்வாறு கண்டறியலாம்?
வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்களின் நம்பர் பிளேட் மஞ்சள் நிறத்திலும், எண்கள் கறுப்பு நிறத்திலும் எழுதப்பட்டிருக்கும். சொந்த வாகனம் என்றால் நம்பர் பிளேட் வெள்ளை நிறத்திலும், எண்கள் கறுப்பு நிறத்திலும் எழுதப்பட்டிருக்கும். எண்கள் எழுதும் பிளேட்டில் எண்களை தவிர, பெயர் உள்ளிட்ட எதுவும் இருக்கக்கூடாது. அதேபோல் புரியாத மொழியிலும், தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களுக்கு இருக்கும் எண்களையும் நம்பர் பிளேட்டில் எழுதக்கூடாது. அப்படி எழுதுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வாகனங்களில் எவ்வாறு எண்கள் எழுதலாம்? அதற்கு ஏதேனும் அளவுகள் உள்ளதா?
இரு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் அதிக திறன் கொண்ட வாகனங்கள் என ஒவ்வொரு வாகனத்துக்கும் குறிப்பிட்ட அளவுகளில் எண்கள் எழுத வேண்டும் என்று மோட்டார் வாகன சட்டத்தில் விதி உள்ளது. அந்த அளவுகளைக் காட்டிலும் வேறு வடிவங்களில் எண்கள் எழுத கூடாது. அவ்வாறு எழுதினால், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சோதனையின்போது அபராதம் விதிக்கப்படும்.

வாகன எண்களை வைத்து சம்பந்தப்பட்டவரின் முழு முகவரி உள்ளிட்ட விவரங்களை பெற முடியுமா?
கட்டாயம் பெற முடியும். வாகன எண்கள் மூலம் சம்பந்தப்பட்டவரின் பெயர், முகவரி ஆகியவற்றை அறிய முடியும். அதற்காகத்தான் வாகனங்களில், மோட்டார் வாகனச் சட்ட விதிப்படி எண்களை எழுத வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

24 Jun 2014

வாகனங்கள் பதிவு செய்யும் முறைகள்

இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், கனரக வாகனம் பதிவு செய்யும் முறையில் வித்தியாசம் உள்ளதா?

இருசக்கர வாகனங்கள், கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் முழுவதுமாக பாடி கட்டப்பட்ட பிறகே விற்கப்படுகின்றன. அவற்றை எவ்வித மாற்றமும் செய்யாமல் சாலையில் ஓட்டுகிறோம். அவற்றுக்கு எப்படி வாகனப்பதிவு செய்வது என்று நேற்று பார்த்தோம். லாரி, பேருந்து போன்ற வாகனங்கள் பாடி கட்டாத நிலையில் விற்கப்படுகின்றன.
வாங்குவோர்தான் மோட்டார் வாகனச் சட்ட விதிமுறைக்கு உட்பட்டு பாடி கட்டிக்கொள்ள வேண்டும். மோட்டார் வாகன சட்டப்படி வாகனத்துக்கு பாடி கட்டியிருப்பதாக பாடி கட்டுவோர் சான்று வழங்குவர். அந்த சான்றுடன் இருப்பிடச் சான்று உள்ளிட்டவற்றையும் சமர்ப்பித்து கனரக வாகனங்களை பதிவு செய்ய வேண்டும்.

வாகனப் பதிவுக்கு கட்டணம் எவ்வளவு?

இலகு ரக வாகனம், மத்திய ரக வாகனம், கனரக வாகனம் என வாகனங்கள் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன. 7 ஆயிரம் கிலோ வரை உள்ளவை இலகு ரக வாகனம். அதற்கு பதிவுக் கட்டணம் ரூ.300 ரூபாய். 7 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கிலோ வரை உள்ள மத்திய ரக வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.400. 12 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட கனரக வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.500. இருசக்கர வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.30.

சொந்த ஊர் இல்லாத மாவட்டம், மாநிலத்தில் வாகனம் பதிவு செய்ய முடியுமா?

வாகனங்களை எங்கு வேண்டுமானாலும் வாங்கலாம். அவ்வாறு வாங்கும் இடத்தில் வீடு அல்லது அலுவலக முகவரி இருக்கவேண்டும். அதற்கான சான்று இருந்தால் மட்டுமே வாகனம் வாங்கும் இடத்தில் அவற்றை பதிவு செய்ய முடியும். இல்லாவிட்டால், தற்காலிகமாக பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பிறகு நிரந்தர, தற்காலிக முகவரி உள்ள பகுதிக்கு வந்து, அந்த எல்லைக்கு உட்பட்ட வட்டார போக்குவரத்து அல்லது மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
*# வங்கிக் கடன் மூலம் வாங்கும் வாகனங்களுக்கு பதிவுச் சான்று (ஆர்.சி.) யாரிடம் வழங்கப்படும்?*
வாகன உரிமையாளரிடம் மட்டுமே வாகனப் பதிவுச் சான்று வழங்கப்படும். வங்கிக் கடன் மூலம் வாகனம் வாங்கியிருந்தால் அடமானம் என பதிவுச் சான்றில் குறிப்பிடப்பட்டிருக்கும். வங்கிக் கடன் முடிந்த பிறகு, சம்பந்தப்பட்ட வங்கி மூலம் நிலுவையில்லாச் சான்று வழங்கப்படும்.
அதை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கொடுத்து, ‘அடமானம்’ என்று குறிப்பிட்டிருப்பதை நீக்கம் செய்துகொள்ளலாம். வங்கிக் கடனை சரிவர செலுத்தாத பட்சத்தில், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பைனான்சியரிடம் பதிவுச் சான்று வழங்கப்படும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

வாகனங்களுக்கு Fancy எண் வாங்குவது எப்படி

சிலர் தங்களது வாகனங்களுக்கு விருப்பமான ஃபேன்ஸி எண்களை எவ்வளவு பணம் செலுத்தி யேனும் வாங்குகின்றனர். ஃபேன்ஸி எண்களைப் பெறும் முறை குறித்து ஈரோடு மண்டல துணைப் போக்குவரத்து ஆணையர் எஸ்.வேலுசாமி விளக்கம் அளிக்கிறார்.எதன் அடிப்படையில் வாகனங்களுக்கு பதிவு எண்கள் வழங்கப்படுகின்றன?
நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்தையும் அடையாளப்படுத்தும் வார்த்தைகள் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. உதாரணமாக தமிழகப் பதிவெண் கொண்ட அனைத்து வாகனங்களிலும் ஆங்கிலத்தில் TN என எழுதப்பட்டிருக்கும். TN என்பது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதுபோல, கேரளத்துக்கு KL, கர்நாடகத்துக்கு KA, புதுச்சேரிக்கு PY என ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியே ஆங்கில எழுத்துகள் வழங்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து வரும் 2 எண்கள், அதாவது TN என்ற எழுத்தைத் தொடர்ந்து வரும் 01, 02, 30, 88 என்பன போன்ற எண்கள் மாநில அரசால் ஒதுக்கப்படுகின்றன. இந்த எண்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களைக் குறிக்கும் எண்களாகும். அதற்கு அடுத்து வரும் நான்கு இலக்க எண்கள் 1 முதல் 9999 வரை வரிசைப்படி வாகனங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அந்த எண்கள் முடிந்த பின் A என, அகர வரிசைப்படி மீண்டும் 1 முதல் 9999 எண் வரை வரிசைப்படி ஒதுக்கப்படும். அடுத்து B, C, D, E... என அடுத்தடுத்து செல்லும்.

வரிசைப்படி எண்கள் ஒதுக்கப்படும்போது, தானாகவே ஃபேன்ஸி எண் கிடைத்துவிட வாய்ப்பு இருக்கிறதா?
1 முதல் 9999 வரை 1111, 2222 என்பது போல மொத்தம் 98 எண்கள் ஃபேன்ஸி எண்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. வரிசைப்படி எண் ஒதுக்கப்படும்போது, இந்த எண்கள் கிடைக்காது. அரசின் வருவாய் கருதி, அந்த எண்கள் யாருக்கும் இலவசமாக வழங்கப்படுவதில்லை.
ஃபேன்ஸி எண் வேண்டுவோர் சென்னை தலைமைச் செயலக உள்துறை (போக்குவரத்து) அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து குறிப்பிட்ட எண் வேண்டும் என்று உத்தரவு பெற்று வரவேண்டும். அவ்வாறு பெற்று வந்தால் ஃபேன்ஸி எண் வழங்கப்படும்.
ஃபேன்ஸி எண் வழங்க வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு அனுமதி உள்ளதா?
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆயிரம் வரை உள்ள நடப்பு எண் வாகனங்களுக்கு வழங்கப்படும். உதாரணமாக ஒரு நாளைக்கு 500 வாகனங்களுக்கு மட்டும் எண்கள் வழங்கப்பட்டால். மறுநாள் 500-ல் இருந்து ஆயிரம் எண்கள் வரை வாகனங்களுக்கு வழங்கலாம். அதில் உள்ள ஃபேன்ஸி எண்களை வாகனங்களுக்கு வழங்குவதற்கும் கட்டணம் உள்ளது. அந்த எண்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஒதுக்க அனுமதி உள்ளது.
(மீண்டும் நாளை சந்திப்போம்)

வாகனங்களுக்கு அனுமதி( பர்மிட்)பெறும் வழிமுறைகள் என்ன?

வாகனங்களுக்கு பல்வேறு வகைகளில் பர்மிட் வழங்கப்படுகின்றன என்பதைப் பார்த்தோம். வாகனங்களுக்கு அனுமதி பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உள்ளன. அவற்றை பெற்று இருப்பிடச் சான்று, வாகன தகுதிச் சான்று, வாகனப் பதிவுச் சான்று உள்ளிட்டவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். அவை சரியாக இருந்தால், ஒரே நாளில் பர்மிட் வழங்கப்படும்.
வாகனம் இல்லாமல்கூட, பர்மிட் கேட்டு விண்ணப்பம் செய்யலாம். அதற்கு செயல்முறை ஆணை வழங்கப்படும். அந்த ஆணை 3 மாத காலம் வரை மட்டும் செல்லுபடியாகும். அதன்பின், செயல்முறை ஆணை தானாக காலாவதியாகிவிடும். அதற்குள், சம்பந்தப்பட்ட வாகனத்துக்கு உரிய தகுதிச் சான்று, வாகனப் பதிவு போன்ற ஆவணங்களை வழங்கினால் பொது போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்படும்.
*தற்காலிக அனுமதி என்றால் என்ன?*
தேசிய அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே நாடு முழுவதும் வாகனத்தை இயக்க முடியும். ஒரு மாநிலத்துக்குள் இயக்கும் அனுமதி பெற்றிருந்தால், மாநிலத்துக்குள் மட்டுமே இயக்க முடியும். அவ்வாறு மாநில அனுமதி பெற்ற போக்குவரத்து வாகனம், வெளிமாநிலத்துக்கு செல்ல நேரிட்டால் அவற்றுக்கு சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து, மோட்டார் வாகன அலுவலகத்தில் தற்காலிக அனுமதி வழங்கப்படுகிறது.
*தற்காலிக அனுமதி பெறாத சூழலில் அவசரமாக வெளி மாநிலம் செல்ல நேர்ந்தால் என்ன செய்வது?*
பிரச்சினை இல்லை. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தற்காலிக அனுமதி பெற முடியவில்லை என்றால், சம்பந்தப்பட்ட மாநில எல்லையில் சோதனைச் சாவடியில் தற்காலிக போக்குவரத்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.
*தற்காலிக போக்குவரத்து வாகன அனுமதி கட்டணம், வரி எவ்வளவு?*
வெளி மாநிலங்களுக்குச் செல்ல ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் வாகன வரி வேறுபடும். எனவே, எந்த மாநிலத்துக்குச் செல்ல வேண்டுமோ அந்த மாநிலத்துக்கான வாகன வரியில் 10-ல் ஒரு பங்கு செலுத்தி தற்காலிக போக்குவரத்து அனுமதி பெறலாம்.
இந்த அனுமதி 7 நாட்கள், ஒரு மாதம், 3 மாதங்கள் என்ற அளவில் வழங்கப்படுகிறது. 7 நாட்களுக்கு மேல் ஒருநாள் தங்கும் சூழல் ஏற்பட்டாலும் ஒரு மாத வரி செலுத்த வேண்டும். அதுபோல, ஒரு மாதத்துக்கு மேல் ஒருநாள் தங்க நேரிட்டாலும் 3 மாத வரி செலுத்தவேண்டும்.

22 Jun 2014

குழந்தை ஜெயித்தால் பாராட்டுங்கள்;தோற்றால் தட்டிக்கொடுங்கள்்

விரல் சப்புவது என்பது குழந்தைகளின் தவிர்க்க முடியாத ஒரு செயலாக உள்ளது. அப்படி விரல் சப்பினால் குழந்தையின் பல் உயர்ந்துவிடும் என்று பயப்படும் பெற்றோர், அக்குழந்தையை அடிக்காத குறையாக கண்டிக்கும் நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள்.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 58.3 சதவீத பெற்றோர், தங்கள் குழந்தைகள் விரல் சப்பினால் கோபத்தில் சட்டென்று பிடித்து இழுத்துவிடுவதாக கூறினார்கள். அதே ஆய்வில், 18.8 சதவீத பெற்றோர், குழந்தையின் கை சப்பும் பழக்கத்தை தவிர்க்க, அக்குழந்தையின் கை விரல்களில் கசப்பு மருந்தை தடவி விட்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். 9.6 சதவீதம் பேர் விரல் சப்பும் தங்கள் குழந்தையை அடிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
மீதமுள்ள 13.3 சதவீதம் பேர்தான், விரல் சப்புவது குழந்தையின் வளர்ச்சியின் ஒரு கட்டம் என்பதை உணர்ந்துள்ளனர்.
ஒரு குழந்தையிடம் விரல் சப்பும் பழக்கம் ஆரம்பத்தில் இருந்தாலும், படிப்படியாக அதில் இருந்து அதை விடுபட வைத்துவிடலாம். அதுவரை பெற்றோர்தான் கம்பை தூக்காமல் இருக்க வேண்டும், குழந்தையை அடிக்க!
பொதுவாக 3 வயதுக்குமேல் ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். 6 வயதுக்குமேல் அதன் குணம், செயல்பாடுகளில் புதுப்புது மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். அதனால், குழந்தையை சரியாக ஹேண்டில் செய்வது அவசியமாகிறது.
பெற்றோருக்கு பக்குவமான பத்து டிப்ஸ்:
* ஒரு குழந்தைக்கு முதன் முதலில் கிடைக்க வேண்டியது முழுமையான அன்பு. குழந்தை கேட்கும் பொருளை வாங்கி கொடுத்தால்தான் அன்பு என்று கிடையாது. குழந்தையை மடியில் அமர வைத்து நல்ல கதைகள் சொல்வது முழுமையான அன்பை அதற்கு கிடைக்கச் செய்யும். இப்படிப்பட்ட பெற்றோரிடம் குழந்தைகள் மிக நெருக்கமாகி விடும்.
* அடுத்ததாக குழந்தைக்கு நாம் கொடுக்க வேண்டியது நல்ல ஆரோக்கியம். குழந்தை பிறந்தது முதல் அதன் எடையை சரியாக ‘மெய்ன்டெய்ன்’ செய்து வரவேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறை அதன் எடையை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் திணித்து குண்டு குழந்தைகளாக மாற்றிவிடக் கூடாது.
* மூன்று வயது முதல் நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். நகத்தை வெட்டுவது, தலையை சுத்தமாக பேணுவது, உள்ளாடைகள் மற்றும் உடல் அந்தரங்க உறுப்புகளை எப்படி ஆரோக்கியமாக பராமரிப்பது என்று அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். 18 வயது ஆகும்வரை ஒரே டாக்டரிடம் அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும்.
* அடுத்து முக்கியமானது பணம். பணம் இன்றி இன்றைய வாழ்க்கை முறையே இல்லை. அதனால், பணத்தின் மதிப்பை சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். நம் குழந்தையுடன் படிக்கும் சக பெரிய இடத்து பிள்ளைகளிடம் பணம் அதிக அளவில் புழங்குகிறது என்பதற்காக நம் குழந்தைக்கும் பணத்தை அள்ளி செலவிடக்கூடாது. வீட்டின் சூழ்நிலையை பக்குவமாக புரிய வைத்து, தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. ‘பாக்கெட் மணி’ கொடுத்தால், அந்த பணத்திலும் சேமிக்கும் பழக்கத்தை குழந்தையிடம் உருவாக்க வேண்டும்.
* குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதும் முக்கியமானது. குழந்தை என்ன பேசுகிறது என்பதை பெற்றோர் பொறுமையாக அமர்ந்து கேட்க வேண்டும். ஸ்கூல் டீச்சர், பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி குழந்தைகள் சொல்வதையும் ஆர்வமாக கேட்க வேண்டும்.
* குழந்தையை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கக்கூடாது. அவ்வப்போது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். தினமும் ‘வாக்கிங்’ அழைத்துச் செல்வதும் அவசியம்.
* குழந்தைகள் முதன் முதலாக தோல்வியை சந்திக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். தோல்வி என்பது வெற்றியின் அடிப்படை என்பதை பக்குவமாக புரிய வைக்க வேண்டும். இதற்காக, அம்மா, அப்பா இருவரும் ஏதாவது ஒரு விளையாட்டு விளையாடி யாரேனும் ஒருவர் தோற்பதுபோல் நடித்து, ‘இதெல்லாம் சகஜம். தோல்வியை கண்டு துவளாமல் இருந்தால் அடுத்து வெற்றிதான்’ என்பதை உணர்த்த வேண்டும். முக்கியமாக, எதையும் ‘டேக் இட் ஈஸி’யாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை குழந்தையின் மனதில் பதிய வைக்க வேண்டும்.
* பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தோடு குழந்தைகளை வளர்க்க வேண்டும். உன்னால் எதுவும் முடியும் என்று சொல்லி சொல்லி வளர்த்தால் குழந்தையிடம் தன்னம்பிக்கை தானாக வளர்ந்துவிடும். பிரச்சினை எப்படி வந்தது? ஏன் வந்தது? அதற்கு என்ன தீர்வு?  இந்த மூன்று விஷயங்களையும் தைரியமாக அணுக குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
* குழந்தை மற்றவர்களிடம் பழகும்போது, அவர்கள் எப்படி தன்னிடம் பழகுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். எதிர் பாலினர் தன்னிடம் பேசும்போது, அவர்களது பேச்சு, பார்வை, தொடுதல் போன்றவற்றை ஒரு குழந்தை புரிந்துகொள்ளும் பக்குவத்தை பெறுவதும் அவசியம். மற்றவர்கள் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை எப்படி கண்டறிவது என்பதை சொல்லிக்கொடுக்கவும் தவறிவிடக்கூடாது.
* கண்டிப்பு என்பதை குழந்தையிடம் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். ஒரு பெற்றோர் தங்களது குழந்தையை அதிகம் கண்டித்தால், அவர்கள் குழந்தையிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஒரு குழந்தை அதன் சக்திக்கு தகுந்தவாறுதான் சிந்திக்கும். அதனால், எந்த சூழ்நிலையிலும் குழந்தையை கட்டாயப்படுத்தக் கூடாது. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடவும் கூடாது.
மொத்தத்தில், அறிவு, அன்பு, உணவு  இந்த மூன்றையும் உங்கள் குழந்தைக்கு எப்பவும் கொடுக்க தயாராக இருங்கள். குழந்தை ஜெயித்தால் பாராட்டுங்கள். தோற்றால் தட்டிக்கொடுங்கள். உங்கள் குழந்தையும் நல்ல குழந்தைதான்!

21 Jun 2014

ரூ10ல் சிறுநீரகக்கல்லுகு தீர்வு.

நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன். இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார். ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார். மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார். சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும். எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்). ( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம். நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது. கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும். மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது. அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்... இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள். சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில : துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்) ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம். திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம். மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம். அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம். தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம். இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம். வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம். மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள். பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது. பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்..!!!!!

14 Jun 2014

நிலம் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளவேண்டிய முழு விவரங்கள்.

நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள
வேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள்
பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும்
போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற
விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.

*புல எண் (Survey Number) *:
ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல
கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல
பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும்.
அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.

நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன.
1. பதிவுத்துறை
2. வருவாய்த்துறை
அதைப் பற்றி சுருக்கமாக காண்போம்

1. *பதிவுத்துறை *:
நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப்
பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office)
அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.

2. *வருவாய்த்துறை *:
இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேட்டில் இருக்கும்.
பட்டா (Patta)
சிட்டா (Chitta)
அடங்கல் (Adangal)
அ' பதிவேடு ('A' Register)
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)
பட்டா (Patta) :
நிலத்தின் உரிமை நமக்கு தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் பட்டாவாகும்.
பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு
செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும் :-
1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்
2. பட்டா எண்
3. உரிமையாளர் பெயர்
4. புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Subdivision)
5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா
6. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை

*சிட்டா (Chitta) :*
ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம்
இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின்
உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய்
பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.

*அடங்கல் (Adangal) :*
*
*ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில்
குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா
எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.

*அ' பதிவேடு ('A' Register) :*
*
*இப்பதிவேட்டில்

1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு
(தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற விவரங்கள் இருக்கும்.

நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) :
நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக
பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது .

*கிரயப் பத்திரம் (Sale Deed**):*

சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தைச்
சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub- Registration office) பதிவு செய்ய
வேண்டும். கிரயப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள்
இருக்கும்.
1. எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி
2. எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி
3. எவ்வளவு அளவு
4. எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது
5. சொத்து விவரம்
சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில்
அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும்
வட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக
இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண்
முதலியவை இருக்கும்.

கிரயப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும்.
1. பதிவு எண் மற்றும் வருடம்
2. சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
3. சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
4.புகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்
5. பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம்
சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை
6. இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி
7. மொத்தம் எத்தனை பக்கங்கள்
8. மொத்தம் எத்தனை தாள்கள்
9. தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர்.

*Land document*

*01.07.06 *முதல்தான் கிரயப் பத்திரத்தில் சொத்து விற்பவர் மற்றும்
வாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டும் முறை அரசால் நடைமுறைப்
படுத்தப்பட்டது. சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும் சொத்து
விற்பவரின் புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டு இருக்கும். இதற்கு முன் பதிவு
செய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படங்கள் இருக்காது. 18.05.09 முதல் இந்த
முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு சொத்து வாங்குபவரின் புகைப்படம்
இரண்டிற்குப் பதிலாக ஒன்று ஒட்டினால் போதும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.

இது தவிர ஒவ்வொரு தாளின் இரு பக்கமும் இந்தக் கிரயப் பத்திரம் மொத்தம் எத்தனை பக்கங்கள் (Sheet) கொண்டது மற்றும் அந்தப் பக்கத்தின் எண், ஆவண எண், வருடம் போன்ற விவரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தினரால் குறிக்கப்பட்டிருக்கும்.ஒவ்வொருதாளின் பின்புறமும் இந்தக் கிரயப் பத்திரம் எத்தனை தாள்களைக் கொண்டது. அந்த தாளின் நம்பர், ஆவண எண், வருடம் முதலியவை குறிக்கப்பட்டு சார்பதிவாளர் கையொப்பம் இருக்கும்.

நாம் பதிவு விவரங்கள் முத்திரைத் தாள்களில் டைப் செய்யும் போது அதன் முன்பக்கம் மட்டும் தான் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 1ல் இருந்து ஆரம்பித்து வரிசையாக இலக்கம் இடப்படும்.. அதனால் தாள்களின் எண்ணிக்கையும் பக்கமும் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக 16 முத்திரைத் தாள்களில் டைப் செய்தால் 16 பக்கங்கள் இருக்கும். ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் போது பதிவின் விவரங்கள் அனைத்தும் முதல் தாளின் பின்புறம் குறிக்கப்பட்டிருக்கும்.

சார்பதிவாளர் அலுவலகத்தில் இதையும் ஒரு பக்கமாக கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கம் கொடுப்பரார்கள். அதனால் மொத்தம் 16 தாள்கள்தான் இருக்கும். ஆனால் பக்கங்கள் மட்டும் 17 ஆகிவிடும்.

*பதிவு செய்யும் முறை*:

நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில்
அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ணயம் செய்யும். அதற்கு பெயர் Guide line value .
நாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்த பெயர் Guide line valueக்கு 8% முத்திரை தாள்களாக வாங்கி அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க முடியாத நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம்.

இதற்கு 41 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத்திரைத் தாள்களின் மதிப்பு, நாம் வாங்கிய முத்திரைத் தாளின் மதிப்பு,, மீதி செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப் பத்திரத்துடன் இணைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக செலுத்தி விடலாம். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் காசோலையாக (Demand Draft) செலுத்த வேண்டும். காசோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத் தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும்.

பதிவுக் கட்டணமாக Guide line valueவில் இருந்து (1%) மற்றும் கணினி கட்டணம் ரூபாய் 100ம் பதிவு செய்யப்படும் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதுவும் ரூபாய் ஆயிரம் வரையில் பணமாகவும் அதற்கு மேல் காசோலையாகவும் செலுத்த வேண்டும்.

முத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்கள் டைப் செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒரு புறம் சொத்து வாங்குபவரும் மறுபுறம் சொத்து விற்பவரும் கையொழுத்து இட வேண்டும். பின்பு சார்பதிவாளரிடம் இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும்.

சார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படம், அடையாள அட்டை முதலியவைகளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப்பார். நாம் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் முதல் முத்திரைத் தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு அவர்களுடைய கையொப்பம், முகவரி, கைரேகை முதலியவை வாங்கப்படும். புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர் இத்துடன் பதிவு நிறைவு பெறும்.

பதிவுக் கட்டணம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இட வேண்டும். சொத்து வாங்குபவர் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த இரசீதைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். அவரைத் தவிர வேறு யாராவது சென்று வாங்க வேண்டியதிருந்தால், இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.

பத்திரப்பதிவின் போது Guide line value-விற்கு 8% முத்திரைதாள் வாங்க
வேண்டும். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட Guide line value அதிகமாக
இருக்கிறது என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்திற்கு ஒரு மதிப்பு நிர்ணயம் செய்து அந்த மதிப்பிற்கு 8% முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அதை சார்பதிவாளர் பதிவு செய்து விட்டு pending document என முத்திரை இட்டு விடுவார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(Collector office) இதற்கென்று ஒரு பிரிவு இருக்கிறது. அங்கிருந்து அரசாங்க அலுவலர் ஒருவர் வந்து இடத்தை பார்வையிட்டு, அதைச் சுற்றி உள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து Guide line value சரியானதா என்பதை முடிவு செய்வார். அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார்.

*Guide line value* சரியாக இருக்கிறது என்று அவர் முடிவு செய்யும் பட்சத்தில் Guide line value-விற்கும் நாம் நிர்ணயித்தமதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும் அல்லது அவர் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதிப்பிப்ற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும். அப்பொழுது தான் நாம் பதிவு செய்த document நம்மிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47A பிரிவு என்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தைப் பெற வேண்டும். இல்லை என்றால் அது அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். நாம் அங்கு சென்று அந்த வித்தியாசத் தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம்.