3 Jun 2014

குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 5

இன்றுள்ள அவசர சூழ்நிலையில் ஒரு கைக்குழந்தை அழுதால், பசியாகதான் இருக்கும் அவர்களுக்கு பாலூட்ட வேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் கணிப்பு. ஆனால் குழந்தை அழுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.இன்றைய பதிவில் இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களைப் பற்றியும் அதை தவிர்ப்பது எப்படி என்பதை காண்போம்-

முதலில் குழந்தையின் பசி : 
 
பிறந்த முதல் மூன்று மாதங்களுக்கு ஒவ்வொருமுறையும் தாய்பால் குடித்த பின்னர் மூன்று மணி நேரத்திற்குப் பின்புதான் பசி ஏற்படும். இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே குழந்தை அழத் தொடங்கினால் நிச்சயம் அது பசியினால் ஏற்பட்டிருக்காது. வேறு காரணம் என்ன என்பதை நாம் கண்டறிய வேண்டும்.
முதலில் குடித்த பால் போதுமானதா? என்பது தாய்க்கே தெரியும். அவ்வாறு எப்பொழுதும் போல் குழந்தை பால் குடித்திருந்தால் வேறு என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும்.
 
பால் குடித்து இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து குழந்தை அழுதால் மட்டுமே குழந்தைக்கு மீண்டும் பால் கொடுத்துப் பார்ப்பதில் தவறொன்று மில்லை.
 
புட்டிப்பால் குடிக்கும் குழந்தையாக இருந்தால் முதலில் எப்பொழுதும் குடிக்கும் அளவு பால் குடித்திருகிறதா என்பதைக் கவனிக்கவும். அப்படியிருந்தால் அழுகைக்குப் பசி காரணமாக இருக்க முடியாது.

குழந்தையின் வயிற்று வலி :

திடீரெனக் குழந்தை அழுவதற்கு வயிற்று வலி ஒரு காரணம். பாலுடன் சர்க்கரையோ, காபியோ இதர பானங்களோ சேர்த்துக் கொடுத்தாலும் வயிறு வலி ஏற்படும்.
 வயிறு உப்பியும், தட்டினால் கிண் என்று சத்தம் கேட்டும், அடிக்கடி காற்று வெளிப்பட்டுக் கொண்டும் இருந்தால் ஜீரணம் சரியில்லை எனலாம்.
அடுத்து கொடுக்க வேண்டிய ஒருவேளை பாலைக் கொடுக்காமல் விட்டு விடவும். குடலுக்கு ஓய்வு தேவை. தண்ணீர் எந்த நேரமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்துக் கொண்டே இருக்கவும். காற்று வெளிப்பட வலி குறையும். குழந்தையும் அயர்ந்து தூங்கிவிடும்
குழந்தைக்கு திடீரென காய்ச்சலோ, தலை வலியோ, தடுமனோ, நெஞ்சு சளியோ இருக்கக்கூடும். அதனால் குழந்தை நலிவுற்று, தூக்கம் கெட்டு, எந்த நேரமும் அழவும் கூடும். குழந்தைக்கு உடம்பு சரியில்லையென்பதை முகத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
 முகம் சோர்வுற்று, மூக்கிலிருந்து தண்ணீர் வடியவும் உடல் லேசான சூட்டுடனும் இருக்கும். தும்மலும், இருமலும் ஆரம்பிக்கக்கூடும் அல்லது குழந்தைக்கு அஜீரணத்தால் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படலாம். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

தவழும் வயதில் குழந்தை கை சூப்புவது :

தாயிடம் பால் குடிக்கும் காலங்களில் அல்லது புட்டியில் பால் அருந்தும் காலங்களில் ஆசை தீர குழந்தை சுவைத்துக் கொண்டிருக்கப் போதிய அவசரம் கிடைக்காமல் போய்விடுவதுதான் கை சூப்புவதற்குக் காரண மாகக் கருதப்படுகிறது. தாய்ப் பால் குடிக்கும் குழந்தைகளை விட புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளிடையே தான் இப்பழக்கம் அதிக மாகக் காணப்படுகிறது. புட்டிப்பால் குடிக்கும் குழந்தைக்குப் பால் முடிந்ததும் தாயார் புட்டியைக் குழந்தையிடமிருந்து எடுத்து விடுதலால் அதற்குப் போதிய பால் கிடைத்திருந்தாலும் சுவைக்கு மின்பம் பூர்த்தியடையவில்லை. ஆகவே குழந்தை பால் குடித்து முடிந்ததும் தன் கட்டை விரலைச் சூப்பத் தொடங்கிவிடும். ஆகவே குழந்தை கட்டைவிரலைச் சூப்புவது பாலுக்காக அல்ல; தனக்குள்ள சுவைக்குமின்பத்தைப் பூர்த்தி செய்து கொள்ளவே ஆகும்.
 சிறிது நேரம் மட்டுமே கை சூப்பினால் அதைப் பற்றிக் கவலையில்லை. சில குழந்தைகள் பசி வந்ததும் பாலுக்காக அந்த நேரம் மட்டுமே அவசரம் அவசரமாகக் கை சூப்பக்கூடும். இதைப்பற்றியும் கவலைப்படவேண்டியதில்லை. 3 அல்லது 4 மாதத்தில் பல் முளைக்கும் பொழுது ஏற்படும் உறுத்தலால் சில குழந்தைகள் கை சூப்பக்கூடும். இதுவும் நின்று விடுமாதலால் இதைப்பற்றியும் கவலையில்லை.

பெரிய குழந்தைகள் கை சூப்புவது சுவைக்குமின்பத்திற்காக அல்ல. இவ்வயதில் அவர்கள் உள்ளத்தில் ஏற்படும் கோபம், மகிழ்ச்சி, அவசரம், பரபரப்பு, கவலை, பயம், திகில் போன்றஉணர்ச்சிகளை மறக்கக் குழந்தை கை சூப்பக் கூடும்.தூக்கத்திற்காகவும் சில குழந்தைகள் கை சூப்பக்கூடும்.

கை சூப்புவதால் ஏற்படும் கெடுதல்கள்:

 கை சூப்பும் குழந்தை சுவைக்குமின்பத்திலேயே தன் முழுக் கவனத்தையும் செலுத்திவிடுவதால் அதற்கு வெளி உலக இன்பங்கள் அனுபவங்கள் கிடைக்காமல் போய்விடுகின்றன. மன வளர்ச்சி இதனால் பாதிப்படைகிறது.
 
எந்த நேரமும் குழந்தை கை சூப்பிக் கொண்டிருந்தால் அதனால் அழுக்கும் கிருமிகளும் வாய்க்குள் புகுந்து வாய்ப்புண்ணையும். இரைப்பையில் புண்ணும் ஏற்பட்டு, பசியின்மையும், வாய் துர்நாற்றமும் ஏற்பட்டு குழந்தை மெலிந்துவிடக் கூடும். மேலும் கை சூப்புவதால் பற்கள் வரிசை மாறிவிடும். குழந்தை வாய் வழியே மூச்சுவிட ஆரம்பித்து அதனால் பல கஷ்டங்கள் உண்டாகலாம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் களைப்பு :

குழந்தையை ஆள் மாறி மாறித் தூக்கிக் கொண்டு கொஞ்சுவதும், எந்த நேரமும் அதனுடன் விளையாடுவதும், அதனைத் திரும்பத் திரும்ப சிரிக்க வைத்துக் கொண்டேயிருப்பதும், அதனைச் சதா ஆட்டிக் கொண்டிருப்பதும் குழந்தையின் உடம்பிலும் மனதிலும் களைப்பை ஏற்படுத்தி விடுகின்றன.
 
குழந்தையை எந்த நேரமும் தொட்டிலும் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தாலும் களைப்பு ஏற்படுவதுடன் மூளைக்கலக்கமும் ஏற்பட்டுவிடும்.

குழந்தையைக் காற்றோட்டமான நிசப்தமான இடத்தில் கீழே படுக்க வைக்கவும். தன் இஷ்டத்திற்கு விளையாடவோ வேடிக்கை பார்க்கவோ தூங்கவோ விட்டுவிடவும்.

குழந்தை திடுக்கென்று அதிருதல் :

குழந்தையை மெதுவாகத் தொட்டாலும், ஏதாவது பட்டாலும், ஒரு சிறிய சப்தம் கேட்டாலும், திடுக்கென்று எழுந்திடும். தூக்கத்திலும் காரணமின்றி திடுக்கிட்டு அடிக்கடி விழித்துக் கொள்ளும்; அழவும் தொடங்கிவிடும். இவ்வாறான சிசுக்களில் சில, திடுக்கிட்டதும் மலம், சிறுநீர் சிறிதளவு கழித்து விடவும் கூடும்.
 
தாயின் வயிற்றுக்குள் எவ்வித அதிர்ச்சிக்கும் காரணமில்லாமல் நிம்மதியுடன் வளர்ந்து வந்த சிசுவின் நரம்புகள் வெளி உலக அதிர்ச்சிகளுக்குத் தக்கபடி பக்குவமடையாமல் இருப்பதே காரணமாக இருக்கக்கூடும். நாளடைவில் வெளிச் சப்தங்களுக்கும் அதிர்ச்சிகளுக்கும் குழந்தையின் நரம்புகள் தாமே பக்குவப்படுத்திக் கொள்வதால் நாளாக நாளாக அதிர்ச்சி குறைந்துவிடுகிறது.அடுத்த பகுதியில் பள்ளி செல்லும் குழந்தைகளின் வளர்ப்பில் எதிர்கொள்ள வேண்டிய நடைமுறை சிக்கல்களை பற்றி அலசுவோம்.

No comments:

Post a Comment