30 Apr 2014

செம்மொழி மாநாடு

செம்மொழி மாநாடு: கலைஞர் எதற்காகக் கூச்சப்படவேண்டும்?
Posted by வினவு

vote-012
முதல்வர் கருணாநிதி நடத்தியிருக்கும் செம்மொழி மாநாடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னர் நடத்திய வளர்ப்புமகன் திருமணத்தை அப்படியே நினைவுபடுத்தியது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அமைச்சர் பெருமக்கள் விழா ஏற்பாடுகளை கவனித்ததாக இருக்கட்டும், போலீசு அதிகாரிகள் குவிக்கப்பட்டதாக இருக்கட்டும், பட்டுப் புடவைகள் சரசரக்க மன்னர் குடும்பத்தினர் முன் வரிசை சோபாக்களில் கொலுவிருந்ததாகட்டும்..  எல்லாம் அதே காட்சிகள்தான். எனினும் இரண்டுக்கும் இடையில் சிறியதொரு வேறுபாடு இருப்பதை நாம் மறுத்துவிட முடியாது. சுதாகரனின் திருமணத்தை  தமிழக அரசு நடத்தவில்லை. செம்மொழி மாநாட்டை தமிழக அரசுதான் நடத்தியிருக்கிறது.
அரசு எந்திரம் முழுவதையும் அடித்து வேலை வாங்கி, ஐ.ஜி முதலான அதிகாரிகளை சாம்பார் வாளி தூக்கவைத்த போதிலும், குடும்ப விழாவை அரசு விழா என்று அறிவிக்கத் தயங்கிய புரட்சித்தலைவியின் நேர்மையுள்ளத்தை வியப்பதா, அன்றி, அரசு விழா என்ற அறிவிப்பின் கீழ் குடும்ப விழாவை நடத்திக் காட்டிய  கலைஞரின் ராஜதந்திரத்தை வியப்பதா தெரியவில்லை. என்ன பெயரிட்டு அழைத்தாலென்ன, ரோஜா ரோஜாதான்!
இது சுயவிளம்பர மாநாடு அல்ல என்று ஜெயலலிதாவுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் கருணாநிதி. “சூரியக் குடும்பம் அழைக்கிறது” என்று சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள் உடன்பிறப்புகள். அவர்கள் பிரச்சினை அவர்களுக்கு. கலைஞர் அழைக்கிறார், தளபதி அழைக்கிறார், அழகிரி அழைக்கிறார் என்று தனித்தனியாக போஸ்டர் அடித்து எதிர்கோஷ்டியின் பொல்லாப்பை சம்பாதிப்பதை விட குடும்பம் என்று குறிப்பிடுவது பாதுகாப்பானதல்லவா?
செம்மொழி மாநாட்டின்  இனியவை நாற்பது பேரணியைப் பார்வையிடுவதற்குப் போடப்பட்டிருந்த மேடையில் நாற்காலிகள் அனைத்தையும் சூரியக் குடும்பத்தின் கோள்கள் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டதால், வ.மு.சேதுராமன் உள்ளிட்ட தமிழறிஞர் பெருமக்கள் நாற்காலிகளுக்குப் பின்னால் நின்றபடி பேரணியை எக்கி எக்கிப் பார்த்தனர் என்று எழுதி அந்தக் காட்சியை புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தது ஜூனியர் விகடன். சாலையில் “இனியவை நாற்பது”. மேடையில் “இன்னா நாற்பது” என்று எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்
“லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்” என்ற தனது நூலில், பிரான்சில் திடீர்புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய லும்பன் கூட்டத்தைப் பற்றி கார்ல் மார்க்ஸ் எழுதியது நினைவுக்கு வருகிறது.
“அதிகமான கூச்சல் போட்டுக் கொண்டு கவுரவம் என்பதே சிறிதுமில்லாமல் பிடுங்கித் தின்பதைப் பிழைப்பாகக் கொண்ட கூட்டம்… கோமாளித்தனமான கம்பீரத்தோடு, விலையுயர்ந்த கோட்டுகளுக்குள் உடலைத் திணித்துக் கொண்டு.. அரசவைக்குள், மந்திரிசபைக்குள், நிர்வாகத்தின் தலைமையான இடத்துக்குள்.. முண்டியடித்துக் கொண்டு நுழைகிறது… இந்தக் கூட்டத்திலேயே மிக நல்லவர்களைக் கூட அவர் எங்கே இருந்து வருகிறார் என்று யாருக்கும் தெரியாது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?” என்கிறது மார்க்ஸின் வருணனை.
மன்னார்குடி குடும்பத்துக்குப் பொருந்தக் கூடிய இந்த வருணனை கோபாலபுரம் குடும்பத்துக்குப் பொருந்தாதா என்ன? நீ மந்திரியா நானும் மந்திரி; நீ கவிதாயினியா, நானும் கவிதாயினி; உன் மகன் சினிமா தயாரிப்பாளனா, என் மகனும் சினிமா தயாரிப்பாளன்; நீ கேபிள் டிவியா, நானும் கேபிள் டிவி; உனக்கு வி.ஐ.பி நாற்காலியா, எனக்கும் வி.ஐ.பி நாற்காலி; உனக்கு வலப்புறமா, எனக்கு இடப்புறம்; உனக்குத் தலைமாடா, எனக்கு கால்மாடு… என்ற இந்த அடிதடியில் தமிழறிஞர்களுக்கு நாற்காலி கிடைக்காததா பிரச்சினை?  மிதிபட்டுச் சாகாமல் தப்பினார்களே, அதுவே தமிழ்த்தாய் செய்த தவப்பயன்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் மொத்தம் பதினைந்து இருபது நிமிடம் செம்மொழி மாநாட்டுக் கவியரங்கத்தை மட்டும் தொலைக்காட்சியில் பார்த்திருப்பேன். “இப்படியொரு கூட்டத்தை யார் கூட்டமுடியும், கலைஞரே நீர் கூட்டமுடியும்” – இது அப்துல் ரகுமான். “மேகங்களே நீங்கள் அங்கிருந்தே கைதட்டுங்கள், கீழே தமிழர்கள் இருக்கிறார்கள் கைதட்டுவதற்கு”- இது வைரமுத்து. “நீங்கள் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்ததனால்தான் தண்டவாளமும் தமிழ் கற்றுக் கொண்டது” – இது ந.முத்துக்குமார். இவர்களையெல்லாம் கவிஞர்கள் என்று ஒப்புக்கொள்ளும் தமிழ் கூறும் நல்லுலகம், அழகிரியின் மகள் கயல்விழியை மட்டும் கவிஞர் இல்லை நிராகரித்துவிடுமா?
தமிழ் சினிமாவின் கிளைமாக்ஸ் காட்சியில், ஹீரோவின் பாட்டையும் அய்யனார் சிலையின் குளோசப்பையும் மாற்றி மாற்றிக் காட்டுவது போல, கலைஞரைப் புகழ்ந்து பாடப்படும் ஒவ்வொரு வரிக்கும், முன்வரிசையில் அமர்ந்திருக்கும் கலைஞரின் முகத்தை நோக்கி காமெரா திரும்பியது. பெரும்பாலும் கலைஞரின் முகத்தில் சலனம் இல்லை.
“ஒன்று இரண்டு என்று வகைப்படுத்தி என்னைப் பாடு” என்று சிவபெருமான் சொன்னவுடனே கே.பி.சுந்தராம்பாள் “ ஒன்றானவன் உருவில் இரண்டானவன்..” என்று பாடுவதையும், அதற்கு சிவபெருமான் ரியாக்சன் கொடுப்பதையும் பார்த்திருக்கிறோம். ஒரு அவ்வையார் பாடினால் ரியாக்சன் கொடுக்கலாம். இருபது முப்பது அவ்வையார்களை மேடையேற்றி விட்டு, அடுத்தடுத்துப் பாடவிட்டால் எப்பேர்ப்பட்ட சிவாஜி கணேசனாக இருந்தாலும் முகபாவம் காட்டுவது கஷ்டம்தானே?  “முடியலடா சாமி” என்று கலைஞர் எழுந்து போய்விடுவார் என்றுதான் நினைத்தேன். இல்லையே.
ரியாக்சன் காட்டவில்லை என்ற காரணத்தினால், இத்தகைய “முகத்துதிக் கவிதைகளை  கலைஞர் விரும்பவில்லை போலும்” என்று அவசரப்பட்டு முடிவுக்கு வருபவர்கள் வரலாறு தெரியாதவர்கள். அல்லது மாநாட்டில் கலைஞர் ஆற்றிய துவக்கவுரையைக் கேட்காதவர்கள். அஞ்சுகம் முத்துவேலருக்கு மகனாகப் பிறந்து, அரை டவுசர் போட்ட காலத்திலேயே தமிழ்த்தொண்டாற்றி.. என்று தனது உரையைத் தொடங்கினார் கலைஞர். இந்தக் கதையை எத்தனை ஆயிரம் முறை கூறிய பின்னரும் “போதும்” என்று அவருக்குத் தோன்றவில்லை. இது தெரிந்திருப்பதனால்தான் ரத்தம் வரும் வரை சொறிகிறார்கள் கவிஞர்கள்.
இருப்பினும் எந்தப் புகழுரையைக் கேட்டாலும், நினைவாற்றல் மிக்க கலைஞருக்கு அது ஏற்கனவே எங்கேயோ கேட்டது போலப் பொறி தட்டுகிறது. 460 கோடியை வாரி இரைத்தும் கலைஞரை முகம் மலரச் செய்யும் ஒரு கவிதை வரியைக் கூட கவிஞர்களால் துப்பமுடியவில்லை. கலைஞர் முகம் மலர்வது இருக்கட்டும். கூட்டத்திடமிருந்து கூட கைதட்டல் வாங்கமுடியவில்லை. முகத்துதியில் ஒருவரை ஒருவர் முந்த முயன்று மூச்சிரைத்த கவிஞர்களுக்கும் கூட “முடியலடா சாமி” என்ற நிலைதான்.
அன்றாடம் புதிது புதிதாக மன்னனைப் புகழ்ந்து பாட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த அரசவைக் கவிஞர்கள் எனப்படுவோர், தம் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள அந்தக் காலத்தில் என்னபாடு பட்டிருப்பார்கள், தமிழ் என்னபாடு பட்டிருக்கும் என்ற கோணத்தில், தமிழின் வரலாற்றையும், தமிழனின் வரலாற்றையும் புரிந்து கொள்வதற்க்கு ஏற்ற மிகச்சிறந்த காட்சி விளக்கமாக அமைந்திருந்தது கவியரங்கம்.
“கலைஞருக்குக் கொஞ்சம் கூடக் கூச்சமாக இருந்திருக்காதா?” என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். கூச்சமா?  வசனத்துக்கு வாயசைக்கும் நடிகன் தனக்கு ரசிகர் மன்றம் வைத்துக் கொள்ளக் கூச்சப்படுகிறானா? தெருமுனைக்குத் தெருமுனை தனது திருமுகத்தையே டிஜிட்டல் பானரில் பார்த்துக் கொள்ள தலைவர்கள் கூச்சப்படுகிறார்களா? லஞ்சம் கேட்க போலீசார் கூச்சப்படுகிறார்களா?  பேராசிரியப் பெருமக்கள் வட்டிக்கு விடக் கூச்சப்படுகிறார்களா? ஐந்திலக்க சம்பளம் வாங்கும் ஐ.டி ஊழியர்கள் ஊதாரித்தனமாக செலவு செய்ய கூச்சப்படுகிறார்களா? அதிகாரிகளும் அறிஞர் பெருமக்களும் அழகிரிக்கு கூழைக்கும்பிடு போடக் கூச்சப்படுகிறார்களா? கலைஞர் மட்டும் எதற்காகக் கூச்சப்படவேண்டும்?
அப்படியெல்லாம் கூச்சப்படுவதென்றால் அதற்கு ஒரு பண்பாடு வேண்டும். அந்தப் பண்பாட்டுக்கு ஒரு அறமும் சில விழுமியங்களும் அடிப்படையாக இருக்கவேண்டும். அவ்வாறு கூச்சப்படாதவர்களைக் கண்டு காறி உமிழும் மனோபாவம் அந்தச் சமூகத்தின் உளவியலில் கொஞ்சமாவது எஞ்சியிருக்க வேண்டும். இருக்கிறதா?
இந்தக் கூத்தில் பங்கேற்ற ஆன்றோர்கள், சான்றோர்கள். அறிஞர்களில் எத்தனை பேர் அடிக்கு பயந்து வந்தவர்கள். எத்தனை பேர் அப்படி சொல்லிக் கொள்கின்ற காரியவாதிகள்?  யாராவது கண்டுபிடிக்க முடியுமா?
ஈழத்தமிழனுகாகக் குரல்கொடுத்த தமிழர்களையெல்லாம் தடாவில் தூக்கி உள்ளே போட்ட காலத்தில்தான் தஞ்சையில் உலகத்தமிழ் மாநாடு நடத்தினார் ஜெயலலிதா. சிவத்தம்பி அதற்கும் வர விழைந்தார். எனினும் விரட்டப்பட்டார். இன்று ஈழத்தின் கல்லறை மீது நடக்கும் செம்மொழி மாநாட்டுக்கு வருகை தந்து“அரசியல் வேறு – தமிழ் வேறு” என்று  தத்துவம் கூறுகிறார். இலங்கை அரசு முள்ளிவாய்க்காலில் ஒரு முத்தமிழ் மாநாட்டை நடத்தினால் அதற்கும் அவரே தலைவர். ஒருவேளை தனி ஈழம் கண்டு அங்கே ஒரு உலகத்தமிழ் மாநாட்டை தம்பி நடத்தியிருக்கக் கூடுமானால், அதற்கும் அவரே தலைமை தாங்கியிருக்க கூடும்.
கலைஞர் மட்டும் எதற்காகக் கூச்சப்பட வேண்டும்?
தான் ஆற்றியிருக்கும் தமிழ்த் தொண்டுக்கு உரிய மரியாதையை வழங்கத் தெரியாத தமிழனுக்கு, அவன் வரிப்பணத்திலிருந்தே தமிழ்ப் பண்பாட்டைக் கற்றுக் கொடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் கலைஞரும், நியாயமான முறையில் பாகம் பிரிக்கப்படாத தங்களது பிதுரார்ஜித சொத்தாக தமிழகத்தைக் கருதும் அவரது குடும்பத்தினரும் எப்படிக் கூச்சப்பட முடியும்?  கனிமொழிதான் பாவம், ரொம்பவும் கஷ்டப்பட்டு கூச்சப்படுகிறார்.
இலக்கியவாதிகள் முகத்தில்தான் என்ன கம்பீரம்! வார்த்தைகளால் நக்கிய புலவர் பெருமக்களின் மீசையில்தான் எத்தனை முறுக்கு? மேடையை அலங்கரித்த நாற்காலிகளுக்குத்தான் எத்தனை மிடுக்கு!
யாரும், எதுவும் கடுகளவும் கூச்சப்பட்ட மாதிரி தெரியவில்லை. நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டும் – அவை தமிழனுக்கு எதற்கு? திராவிட இயக்கத்தின் நிழலில் தழைத்த புலவர் பெருமக்களின் பாரம்பரியம் மிக்க பிழைப்புவாதம் ஒருபுறம். தாராளமயக் கொள்கைகளால் அதிகாரபூர்வப் பண்பாடாக ஞானஸ்நானம் பெற்றிருக்கும் புதிய பிழைப்புவாதம் ஒருபுறம். செம்மொழி மாநாடு முன்னைப் பழைமையும் பின்னைப் புதுமையும் இணைந்த புதியதொரு வீரிய ஒட்டு ரகத் தமிழ்ப் பண்பாட்டை நம் கண்முன்னே விரித்துக் காட்டியது.
இதுதான் தமிழகம்.
“ஈழப்படுகொலைக்குப் பின்னரும் திமுகவும் காங்கிரசும் தமிழகத்தில் வெற்றி பெற முடிந்தது எப்படி?” என அன்று வியந்தோர் உண்டு. “தமிழர்களின் வாக்குகளைப் பணம் கொடுத்து வாங்கிவிட்டார்கள்” என்பது பாதி உண்மைதான். “விற்றுக் கொள்ள முன்வந்தது” மீதி உண்மை. அன்று ஈழப்படுகொலைக்கு எதிராகப் பாமரத் தமிழர்கள் சிலர் தீக்குளித்தார்கள், பலர் சிறை சென்றார்கள். இன்று படித்த அறிஞர்கள் யாரும் “குற்றம் குற்றமே” என்று முழங்கிச செம்மொழி மாநாட்டை எதிர்த்துச் சிறை சென்றதாகத் தகவல் இல்லை.
பாலைவனச் சோலை போல மதுரை வழக்குரைஞர்கள், உயர்நீதிமன்றத்தில் தமிழ் கோரி உண்ணாவிரதத்தைத் துவக்கினார்கள். சென்னை வழக்குரைஞர்கள் தொடர்ந்தார்கள். “நீதிமன்ற வளாகத்துக்குள் நீதியின் குரலையும் காக்கையின் குரலையும் தவிர வேறு எந்தக் குரல் ஒலித்தாலும் அது சட்டவிரோதம்” என்று நீதியரசர்கள் கூறிவிட்டார்கள். “வளாகத்துக்கு வெளியே காக்கையின் குரலைத் தவிர வேறு எந்தக் குரல் ஒலித்தாலும் அது செம்மொழிக்கு விரோதம்” என்று காவல்துறை கூறிவிட்டது. எனவே, உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியான தமிழ், தற்கொலை செய்து கொள்ள முயன்ற குற்றத்துக்காக ரிமாண்டில் வைக்கப்பட்டு மாநாடு முடியும் வரை பாதுகாக்கப்பட்டது.
“சூரியக் குடும்பம் அழைக்கிறது” என்று உடன்பிறப்புகள் கூறியிருந்த உண்மையை மொழிபெயர்த்து, “இது கருணாநிதியின் குடும்பவிழா”என்று சுவரொட்டி ஒட்டினார்கள் ம.க.இ.க தோழர்கள். “அதை நாங்க சொல்ல்லாம். நீ சொல்லக்கூடாது” என்று சிறை வைக்கப்பட்டார்கள்.
தமிழகமெங்கும் தேடுதல் வேட்டை, கியூ பிரிவின் கண்காணிப்பு. ஒரு பகுதியில் ஓட்டைப் பிரித்து வீட்டுக்குள் குதித்து தமிழ் விரோதிகளான ம.க.இ.க தோழர்களைத் தேடியது போலீசு. திருச்சியில் ரயில்வே பிளாட்பார்மில் சுமை இறக்கிக் கொண்டிருந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தொழிலாளர்கள் 15 பேரை, அங்கேயே போலீசு வளைத்துப் பிடித்தது. சென்னையில் சுவரொட்டி ஒட்டியதற்காக கைது செய்யப்பட்ட பெண்கள் விடுதலை முன்னணியின் செயலர், ஊடகங்களைத் தொலைபேசியில் அழைத்து செய்தி சொன்னபோது, “அம்மா நாங்கள் செம்மொழி மாநாட்டுக்கு எதிராக எந்தச் செய்தியும் கவர் பண்ணுவதில்லை” என்று பதிலளித்திருக்கின்றனர் பத்திரிகையாளர்கள். ஊடகங்கள் செம்மொழியால் எப்படி கவர் பண்ணப்பட்டிருக்கின்றன என்பது தினமணி தலையங்கத்தைப் பார்த்த மாத்திரத்தில் தெரிந்ததே! தினமலர் பரவாயில்லை, “செம்மொழி மாநாட்டை எதிர்த்த நக்சலைட்டுகள் கைது” என்று செய்தி போட்டு, தமிழின விரோதிகளைத் தமிழர்களுக்கு அடையாளம் காட்டியது.
வழக்குரைஞர் போராட்டத்தைச் சிக்கெனப் பற்றிக் கொண்ட ஜெயலலிதா, உடனே ஒரு ஆர்ப்பாட்டத்தை அறிவித்து அதில் தோழமைக் கட்சிகளும் கலந்து கொள்ளவேண்டும் என்று ஆணையிட்டார். வலது, இடது கம்யூனிஸ்டு தொண்டர்கள் தலா 4 கொடியுடன் கலந்து கொண்டனர் . ராஜாவும் எச்சூரியும் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டனர். கூட்டணியால் வேறுபட்டாலும் தமிழால் ஒன்றுபடுவது என்பது இதுதான் போலும்!
“தமிழர்களே, கலைஞர் அழைக்கிறார். சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து  செம்மொழி மாநாட்டில் ஒன்றுபடுவோம் வாரீர்!” என்று திமுகவினர் சென்னையில் ஒரு விளம்பரத் தட்டி வைத்திருந்தனர். மொழி வேறுபாட்டைக் கடந்த மொழி உணர்வு! அடடா, எப்பேர்ப்பட்ட கவிதை! “சூடு, சொரணை, சுயமரியாதை கடந்து” என்பதையும் சேர்த்து எழுதியிருக்கலாம். விசேடமாகக் குறிப்பிட வேண்டிய அளவுக்கு அவை முக்கியத்துவம் வாய்ந்தவையல்ல என்று உடன்பிறப்புகள் எண்ணியிருக்கக் கூடும்.
ஐந்து நாள் மாநாடு, கவியரங்கம், ஆய்வரங்குகள், 998.4 ஆய்வுக் கட்டுரைகள், ரகுமானின் யாதும் ஊரே யாவரும் கேளீர்.. ஆகிய அனைத்தின் சாரப்பொருளையும் ஒரே வரியில் கூறிவிட்டது, உடன்பிறப்புகளின் விளம்பரத்தட்டி உதிர்த்திருந்த அந்தக் கவிதை.
அம்மா நடத்திய உலகத் தமிழ் மாநாட்டுக்கும் அய்யா நடத்திய செம்மொழி மாநாட்டுக்கும் என்ன வேறுபாடு? அம்மா நடத்திய குடும்ப விழாவுக்கும் அய்யா நடத்தியிருக்கும் அரசு விழாவுக்கும் என்ன வேறுபாடு? அம்மா ஆட்சிக்கும் அய்யா ஆட்சிக்கும் என்ன வேறுபாடு?
“கோலெடுத்தால் குரங்காடும்” என்பது அம்மாவின் அரசாட்சித் தத்துவம். “கோல் முனையில் வாழைப்பழத்தை தொங்கவிட்டால் எப்பேர்ப்பட்ட குரங்கும் கரணம் போடும்” என்பது அய்யாவின் ஆட்சித் தத்துவம்.
மாநாட்டின் இறுதியில் தமிழுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் கலைஞர். அப்படியானால் ஏற்கெனவே செம்மொழி மாநாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 460 கோடி?
அதுதான் கோலின் முனையில் கட்டப்பட்ட வாழைப்பழம்.
அப்போ இந்த வாழைப்பழம்? அதாண்ணே  இது.

தேர்தல் சீட்டு இன்றைய சந்தை நிலவரம் 2014்.

தி.மு.க, காங்கிரசு கூட்டணி முறியும் என்ற நாடகம் ஊடகங்களில் பரபரப்பாய் பேசப்பட்ட நேரம். ஒரு வேலையாய் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்றிருந்தேன். புதிய சட்டமன்றத்தின் எதிரே இருக்கும் இந்த நெடுஞ்சாலையிலிருந்து இரண்டு பக்கமும் பிரியும் சந்துகளில் ஏராளமான மேன்சன்கள் எனப்படும் தங்கும் விடுதிகள் இருக்கின்றன. இவற்றில் மாதவாடகைக்கும், தினசரி வாடகைக்கும் அறைகள் கிடைக்கும். திருமணமாகாமல் சென்னை வரும் இளைஞர்கள் இங்கிருந்தே தமது தலைநகரத்து வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர்.
தமிழகத்தின் தலைவிதியை தீர்மானிப்பதாக நம்பப்படும் தேர்தலில் சீட்டு கேட்டு வந்த நிறைய கட்சி பிரமுகர்களும் அங்கே தங்கியிருந்தனர். சென்னை தவிர்த்த எல்லா மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்தனர். அ.தி.மு.கவை விட தி.மு.க கறை வேட்டிகளே அதிகம் தென்பட்டன. அதிலும் ஸ்டிக்கர் கூட பிரிக்கப்படாத புத்தம் புதிய வேட்டிகளும் இருந்தன. அந்த குறுகிய சந்துகளில் இவர்களது இனோவா, ஸ்கார்பியோ கார்கள் பெரும் நெரிசலை தோற்றுவித்தன. இவர்களெல்லாம் யார்? என்ன நம்பிக்கையில், தகுதியில் சீட்டு கேட்டு வருகிறார்கள்?
தி.மு.க போட்டியிடும் 121 தொகுதிகளில் வாய்ப்பு கேட்டு 15,000 பேர் விண்ணப்பத்திருக்கின்றனர். இதில் தலைவர்களுக்காக பரிந்துரைக்கும் காக்கா ஐஸ் மனுக்களைத் தவிர்த்து விட்டு பார்த்தாலும் ஒரு தொகுதிக்கு சுமார் 80 முதல் 90 பேர் வரை விண்ணப்பித்திருக்கின்றனர். இதை கருணாநிதியும் பெருமையுடன் தெரிவித்திருக்கிறார்.
விண்ணப்பித்திருப்போர் நேர்காணலுக்காக தி.மு.க வரலாற்றை படித்து தயார் செய்து வருவதாக ஒரு பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. ஆனால் தி.மு.க நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகள் எதுவும் வரலாறு குறித்து இல்லை. அது வைட்டமின் ப குறித்துதான் மையம் கொண்டிருந்தது. ” எவ்வளவு ரூபாய் செலவழிப்பீர்கள், தொகுதிக்குள் சாதி செல்வாக்கு என்ன, குடும்பப் பின்னணி” போன்றவைதான் முக்கிய கேள்விகள். இந்த கேள்விகள்தான் மற்ற கட்சிகளிலும் கேட்கப்படுகின்றன என்றாலும் இதில் ட்ரெண்ட் செட்டர் தி.மு.கதான். வந்தவர்களில் பெரும்பான்மையினர் ஐந்து கோடி ரூபாய் செலவழிக்கும் தகுதி கொண்டவர்கள் என்றும், இதில் கூடக்குறைய இருந்தாலும் தி.மு.க என்றால் வேட்பாளர் குறைந்த பட்சம் ஐந்து கோடி செலவழிக்க வேண்டும் என்பதுதான் சந்தை நிலவரம் என்கிறார்கள்.
எனில் ஒரு தொகுதியில் ஐந்து கோடி ரூபாயை செலவழிக்கும் ஐம்பது தி.மு.க காரர்கள் குறைந்த பட்சம் இருக்கிறார்கள் என்றாகிறது. இதில் விதிவிலக்கு இருக்கலாம். ஆனாலும் நாம் பொதுவிதியைப் பற்றியே இங்கு பேசுகிறோம். வெற்றி, தோல்வி இரண்டில் எது வந்தாலும் இப்படி 5 கோடி ரூபாயை செலவழிக்கும் வல்லமையை இவர்கள் எங்கிருந்து பெற்றார்கள்? ஒரு வேளை வெற்றி பெற்றாலும் இந்த ஐந்து கோடிக்கு ரிடர்ன் எவ்வளவு கிடைக்கும்?
இந்தியாவில் ஊழல் முறைகேடுகள் என்றால் அதில் ஆதாயம் அடைந்த அரசியல்வாதிகள்தான் நம் நினைவுக்கு வருகிறார்கள். ஆனால் இந்த ஆதாயத்தின் கடைசி நபராகத்தான் அரசியல்வாதி இருக்கின்றார். முதலில் முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்தான் என்றுதான் அந்த வரிசை இருக்கின்றது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட முதலாளிகள், அதிகாரிகள், காங்கிரசு, தி.மு.க என்று இருப்பதைப் பார்க்கலாம். இதில் தி.மு.கவின் மேல்மட்டமே முதலாளிகளாக இருப்பதால் அவர்களில் ஒரு சிலர் முதலாவதாகவும் இருக்கலாம். அப்போதும் கூட ரிலையன்ஸ், டாடா போன்ற தரகு முதலாளிகளின் ஆதாயத்தை அவர்கள் அடைந்திருக்கவில்லை.
இதனால் அரசியல்வாதிகள் ஊழல் செய்த பணம் குறைவு என்ற பொருளில்லை. உலகமயம் அமுலுக்கு வந்த பிறகு ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் பெருமளவு சொத்து சேர்த்திருக்கின்றனர். நாட்டின் இயற்கை வளத்தையும், மக்கள் வளத்தையும் ஒருங்கே அபகரிக்கும் முதலாளிகள் அதற்கு உதவி புரியும் அரசியல்வாதிகளுக்கு கணிசமான தொகையை அளிக்கிறார்கள். இதன் அளவு நமது கற்பனைக்கு அப்பாற்பட்டது என்பதை ஸ்பெக்ட்ரம் ஊழலில் பார்த்திருக்கிறோம்.
இதை கீழ்மட்டத்திலிருந்து பார்க்கலாம். ஒரு வார்டு கவுன்சிலர் எப்படியெல்லாம் சம்பாதிக்கிறார்?
சென்னை மாநகராட்சி, வார்டு ஒன்றுக்கு குறைந்த பட்சம் ஒரு கோடி முதல் 5 அல்லது 10 கோடிகள் வரை ஒரு வருடத்தில் செலவழிக்கிறது. இதில் மற்றவருக்கான கமிஷன் போக கவுன்சிலருக்கு பத்து சதவீதம் செல்கிறது. இதன்படி ஒரு கவுன்சிலர் பத்து இலட்சம் முதல் ஐம்பது இலட்சம் வரை சம்பாதிக்கிறார். அடுத்து அந்த வார்டில் வீடு கட்டுபவர் அதன் மதிப்பை பொருத்து கவுன்சிலருக்கு சன்மானம் அளிக்க வேண்டும். எதிர்த்துக் கேட்டால் ரோட்டில் கட்டிட பொருட்களை போடக்கூடாது என்பதிலிருந்து, குடிநீர், கழிவுநீர் இணைப்பு வரை பிரச்சினைக்குள்ளாகும். ஒரு வார்டில் ஒரு வருடத்தில் சுமார் நூறு வீடுகள் கட்டப்படுமென்றால் அதில் கவுன்சிலர் குறைந்தது 25 இலட்சம் முதல் 50 இலட்சம் சம்பாதிப்பார்.
பிறகு வார்டில் உள்ள புறம்போக்கு நிலம் இருந்தால் அதை வளைத்து விற்பது உண்டு. இதை யார் செய்தாலும் அதில் குறிப்பிட்ட தொகை கவுன்சிலருக்கு போக வேண்டும். அதே போல வார்டில் நடைபெறும் நில, மனை விற்பனையிலும் கவுன்சிலருக்கு ஒரு கழிவுத் தொகையை புரோக்கரே தனியாக எடுத்து வைப்பார். இதில் வருமானம் கோடியைத் தாண்டும். இறுதியாக வார்டில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்துக்களிலும் கவுன்சிலர் இருப்பதை பலரும் விரும்புவார்கள். போலிசார் கூட தங்களிடம் வரும் பஞ்சாயத்துக்களில் கவுன்சிலர் இருப்பதையே விரும்புவார்கள். இந்த வருமானம் தனி.
வார்டில் நடக்கும் கட்சி பொதுக்கூட்டங்களுக்கு வசூல், கோவில் கும்பாபிஷேகத்திற்கான வசூல், மாநகராட்சிக்கான ஊழியர் நியமன வருமானம் எல்லாம் தனி. இதில் கவுன்சிலரின் படங்கள் பிளக்சில் எல்லா முக்கிய இடங்களிலும் வீற்றிருக்கும். ஆக ஐந்து வருடம் கவுன்சிலராக இருக்கும் ஒரு நபர் தனது சொத்துமதிப்பை சில பல கோடிகளில் தேற்றிவிடுகிறார். இவர்கள் எவரும் ஸ்கார்ப்பியோ காருக்கு குறைவாக பவனி வருவது கிடையாது. வார்டில் நான்கைந்து வீடுகள், கடைகள் என்று ஆயுசுக்கும் போதுமான மதிப்பை சுருட்டி விடுகிறார்கள். இது எல்லா கவுன்சிலருக்கும் பொருந்துமென்றாலும் ஆளும் கட்சி என்பதால் தி.மு.க கவுன்சிலர்கள் அதிகம் சம்பாதித்து விடுகிறார்கள்.
சென்னையில் தி.மு.க கவுன்சிலர்களின் ‘சம்பாத்தியம்’ உருவாக்கியிருக்கும் கெட்ட பெயரால் தி.மு.கவின் தலைவர்கள் பலர் வெளித் தொகுதிகளுக்கு சென்றிருக்கிறார்கள் என்ற செய்தியில் உண்மை இல்லாமல் இல்லை.
_______________________________________________________
ஒரு கவுன்சிலரே இவ்வளவு சம்பாதிக்கிறார் என்றால் பல வார்டுகளைக் கொண்ட ஒரு சட்ட மன்றத் தொகுதியில் வருமானம் எவ்வளவு இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம். ஒரு சட்டமன்றத் தொகுதியில் தமிழக அரசு செலவழிக்கும் எல்லா திட்டங்களுக்கான ஒப்பந்ததாரர் தொகையில் ஒரு கழிவுத் தொகை உறுப்பினருக்கு சென்றுவிடும். மேலும் இவர்கள் சுருட்டுவதோடு தங்களது அல்லக்கைகள் சம்பாதிப்பதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தி ஒரு கூட்டத்தை வைத்துக் கொள்கிறார்கள். மக்களிடையேயும் ஒரு வள்ளல் தோற்றத்தை உருவாக்கிகொண்டும், சாதி ரீதியாகவும் செல்வாக்கை உருவாக்கி கொள்கிறார்கள்.
மணல் விற்பனை, ரியல் எஸ்டேட், டாஸ்மார்க்கின் பார், ஓட்டுநர் நடத்துநர் போன்ற நியமன அரசு ஊழியர் பதவிகள், தொழில் லைசென்சுகள், தொழில் மாமூல்கள், கிரானைட் தொழில், என்று ஏராளமான வகைகளில் வருமானம் கொட்டுகிறது. இதுபோக கட்சியின் தலைமைக்கு அவ்வப்போது பெரும் தொகையை வசூலித்தும் கொடுப்பார்கள். எம்.ஏஎல்.ஏக்கள், எம்.பிக்கள், கழகங்களின் மாவட்ட செயலாளர்கள் எல்லாம் இந்த ரகத்தில் வருவார்கள். இவர்கள் அந்தந்த மாவட்ட பகுதிகளின் குறுநில மன்னர் என்று கூட சொல்லலாம்.
கலைஞர் குடும்பம், அமைச்சர்கள் முதலான தி.மு.கவின் மேல்மட்டத்தினர் அவர்களே முதலாளிகளாவும் இருக்கிறார்கள். அனைவருக்கும் பெரும் தொழில் நிறுவனங்கள் உண்டு. மாநிலத்தின் அனைத்து ஒப்பந்ததாரர்களின் கழிவுத் தொகையும் இவர்களுக்கு சென்று விடும். பன்னாட்டு நிறவனங்கள் தொடர்பான அரசு முடிவுகள் இவர்கள் மூலமே நடப்பதால் அதில் நாம் நினைத்தும் பார்க்க முடியாத வருமானம் செல்கிறது. சான்றாக ஹூண்டாய் தொழிற்சாலை கழிவுப் பொருட்களின் மாத மதிப்பு 50 இலட்சமாகும். இது ஒரு தி.மு.க மேல்மட்டத்திற்கு செல்கிறது. மற்றும் எல்லா அமைச்சர்களும் பொறியியல் கல்லூரிகள் முதல் காஸ்ட்லியான பள்ளிகளையும் வைத்து நடத்துகிறார்கள்.
ஓட்டல் முதலாளிகள் சங்கம், ஆம்னி பஸ் முதலாளிகள் சங்கம், தனியார் மருத்தவ மனைகள் சங்கம், தனியார் பள்ளிகள் சங்கம், தனியார் கல்லூரிகள் சங்கம், சிமெண்ட் மற்றும் கட்டுமான முதலாளிகள் சங்கம் என்று எல்லா தொழில்களுக்குமான முதலாளிகள் சங்கத்தினர் அந்தந்த அமைச்சருக்கு குறிப்பிட்ட காலத்திற்கான மாமூலை பெரும்தொகையில் தருகிறார்கள். சில இடங்களில் இது சொத்து பரிவர்த்தனையாகவும் நடக்கிறது. தமிழகத்தின் பெரும் மதிப்பிலான முன்னணி ரியல் எஸ்டேட் வர்த்தகங்களையும் இவர்களே கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.
இவர்கள் தமது சொத்துக்களை நம்பிக்கையான பினாமி மற்றும் குடும்பத்தினர் மூலம் வைத்து உப்ப வைக்கிறார்கள். ஹவாலா, அண்டை நாடுகளில் சொத்துக்கள் வாங்குதல், சுவிஸ் வங்கி என்று இவர்களது முறைகேட்டு பணம் எளிதில் கண்டுபிடிக்க இயலாதபடி மறைந்திருக்கிறது. மேலும் தி.மு.கவில் கட்சிப்பதவிகள் அனைத்திலும் கொட்டை போட்ட பெருச்சாளிகளின் வாரிசுகளே இப்போது வருகிறார்கள். அ.தி.மு.கவில் கூட அம்மாவின் தயவால் சில சாதாரணமனிதர்கள் பொறுப்புக்கு வருவது என்பதெல்லாம் தி.மு.கவில் கனவில் கூட நடவாத காரியம்.
91, 2001-ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற ஜெயா கும்பல் அடித்த கொள்ளையை விட அளவிலும், வகைகளிலும் தி.மு.க கும்பல் இந்த 5 ஆண்டுகளில் அடித்த கொள்ளை அதிகம். மேலும் தொடர்ந்து மத்தியில் கூட்டணி அமைச்சரவையில் பங்கேற்றிருப்பதும் இதற்கு ஒரு காரணம்.
_______________________________________________
தி.மு.கவின் வட்ட செயலாளர் முதல் அறிவாலயத்தை கட்டி ஆளும் கலைஞர் குடும்பம் வரை இவர்களது உணர்வையும், உணர்ச்சியையும் தீர்மானிப்பது இந்த வர்த்தக உணர்வுதான், கொள்கை சார்ந்த அரசியல் உணர்வல்ல. தி.மு.கவில் ஒருவர் வட்ட செயலாளராகவோ இல்லை மாவட்ட பிரமுகராவோ, சட்ட மன்ற உறுப்பினராகவோ ஆக வேண்டுமென்றால் அதற்கு அவரது அரசியல் உணர்வு ஒரு போதும் தீர்மானிக்கும் காரணமாக இருப்பதில்லை. அவரால் தி.மு.க எனும் கார்ப்பரேட் கம்பெனிக்கு எப்படி சம்பாதித்து கொடுக்க முடியும், அந்த சம்பாத்தியத்திலிருந்து கட்சியை எப்படி நடத்த முடியும் என்பதிலிருந்தே அவரது செல்வாக்கு தீர்மானிக்கப்படுகிறது.
மாநாடுகள், கட்சி கூட்டங்கள், அமைச்சருக்கான அணிதிரட்டல்கள் அத்தனையும் ஒரு வணிக நிறுவனம் போலவே நடக்கிறது. சுவரொட்டி ஒட்டுவது, கொடி நடுவது, கூட்ட வேலைகள் அனைத்தும் இப்போது தொண்டர்கள் செய்வதில்லை. மேலும் இதற்கு தேவையில்லாத வகையில் இப்போது கட்சியின் பிரச்சாரத்தை ஒன்றுக்கு இரண்டாக தொலைக்காட்சிகளே செய்கின்றன. பூத் ஏஜெண்ட், வட்டபொறுப்பாளர், தொகுதி பொறுப்பாளர் அத்தனைக்கும் ஒரு ரேட் உண்டு. கூடுதலாக இதில் திருமங்கலம் முறை என்று ஒரு பெரிய முறையையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
நேர்காணலில் ” எவ்வளவு செலவழிப்பீர்கள்?” என்ற கேள்வி முதன்மையாக இருப்பதன் பின்னணி இதுதான். அதனால்தான் தி.மு.க எனும் கட்சியில் இருப்பது ஒரு வர்த்தக உணர்ச்சிதான் என்கிறோம். இதற்கு பொருத்தமான சான்றாக தி.மு.க – காங்கிரசு மோதல் நாடகத்தை பார்க்கலாம்.
தி.மு.கவில் அரசியல் உணர்ச்சியோடு இருக்கின்ற தொண்டர்கள் இருக்கிறார்கள். எனினும் அதனோடு பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம், ஊழல் எல்லாம் கலந்துதான் இருக்கிறது. இவர்கள் நேரடியாக தி.மு.க எனும் வர்த்தக வளையத்தில் ஒரு ஆளாக வரமுடியாத கீழ் நிலையில் இருப்பவர்கள். அந்தந்த குறுநில மன்னர்களின் எலும்புத்துண்டில் காலத்தை ஓட்டுபவர்கள். இவர்கள்தான் காங்கிரசுடனான கூட்டணி முறிவு என்ற சேதி வந்ததும் துள்ளிக் குதித்தார்கள்.
இது ஏதோ ஒரு வகையில் கொஞ்சம் தன்மான உணர்வினைக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மைதான். மேலும் காங்கிரசை பிடிக்காத மற்ற நடுநிலைமையாளர்கள் கூட தி.மு.கவின் முடிவை வெகுவாக வரவேற்றார்கள். ஆனால் தி.மு.கவில் பொறுப்பில் இருக்கும் எவரும் இத்தகைய தன்மான உணர்ச்சியில் இதை பார்த்திருக்க் மாட்டார்கள் என்பது நிச்சயம். அவர்களை பொறுத்த வரை இது இரண்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கிடையே எழுந்த சிக்கல். ஒன்றின் வாழ்வு மற்றதனைச் சார்ந்து  இருப்பதால் அவர்கள இதை தீர்க்கவே நினைத்தார்கள்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பாரளுமன்றத்தில் அடக்கி வாசிக்கும் காங்கிரசு சி.பி.ஐ விசாரணையில் தலையிட முடியாது என்றதும், போபார்ஸ் வழக்கை ஊற்றிய மூடியது போல இதையும் மூட வேண்டும் என்று தி.மு.க  கோரியதும் உண்மையாக இருக்கலாம். மற்றபடி இந்த விசாரணை வேறு எதையும் அதாவது பாதிப்பு ஏற்படுத்தும் வண்ணம் இருக்காது என்பது இருவருக்கும் தெரியும். அப்படி ஒரு பாதிப்பு வரும் பட்சத்தில் அது ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆதாயம் அடைந்த முதலாளிகளின் பிரச்சினை என்பதால் அதை யாருமே விரும்பமாட்டார்கள்.
காங்கிரசுக்கு தமிழகத்தில் ஒரு வோட்டு கூட கிடையாது, தனித்து நின்றால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என்பது தி.மு.கவிற்கு தெரியும். ஆனால் மத்தியில் ஆட்சியில் பங்கேற்றிருப்பதால் அடைந்த ஆதாயத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் காங்கிரசு கேட்கும் தொகுதிகள் அதிகமில்லை என்பதும் தி.மு.க அறியும். இதை வைத்தே காங்கிரசு தி.மு.கவை வழிக்கு கொண்டு வந்தது என்பது இப்போது அனைவரும் அறிந்த ஒன்று.
இப்படி இரு கட்சிகளுக்கும் சாதக பாதக விசயங்கள் இருப்பதும் அவை இரண்டு கம்பெனிகளின் வர்த்தக முரண்பாடுகளினால் எழுந்தது என்பதும்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம். இதில் காங்கிரசு மேல் கை எடுத்தற்கு அது தி.மு.கவை விட பெரிய கம்பெனி என்பதை தாண்டி வேறு இரகசியங்கள் ஏதுமில்லை. ஆரம்பத்தில் இந்த முரண்பாடு தி.மு.கவின் தன்மானத்திற்கு விடப்பட்ட சவால் என்பதாக சித்தரித்த கருணாநிதி பின்னர் காங்கிரசு கேட்ட அதே 63 தொகுதிகளை ஒப்புக் கொண்டார் என்பதிலிருந்தே இது தன்மானப்பிரச்சினை இல்லை, பொறுக்கித் தின்பதில் உள்ள அடிமைத்தனம் என்பதை  புரிந்து கொள்ளலாம்.
வியாபாரத்தில் தனிப்பட்ட மான அவமான உணர்ச்சி இல்லை என்பது தி.மு.கவிற்கும் நன்கு பொருந்தும். சென்ற சட்டமன்றத்தில் கருணாநிதியை அர்ச்சித்த சேகர்பாபு இப்போது தி.மு.க வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது அதற்கு சமீபத்திய சான்று.
தி.மு.க எப்படி ஒரு கார்ப்பரேட் கம்பெனியாக செயல்படுகிறதோ அதே போன்றுதான் அ.தி.மு.கவும் செயல்படுகிறது. ஆட்சியில் இல்லை என்பதால் இந்த கம்பெனியின் வரவு செலவு நட்டத்தில் இருப்பது என்பதைத் தாண்டி வேறு வேறுபாடு எதுவும் இல்லை.
அன்றாட வாழ்க்கைக்கு பயன்படாத தி.மு.க அரசின் நலத்திட்டங்களைத் தாண்டி விலைவாசி உயர்வு, கருணாநிதி குடும்பத்தின் ஆதிக்கம் போன்றவை காரணமாக மக்கள் அதிருப்தியிலும் கோபத்திலும் இருக்கிறார்கள். எனினும் ஒரு தொகுதியில் 5000 முதல் 10000 வாக்குகளை தலா ரூ. 5000 கொடுத்து வாங்கிவிடலாம் என்று தி.மு.க அசாத்திய நம்பிக்கையுடன் இருக்கிறது. மேலும் பூத் ஏஜெண்டு முதல் வட்டார பொறுப்பாளர் வரை அனைவரும் அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்களை விலைகொடுத்து வாங்கும் நிலையிலும் தி.மு.க இருக்கிறது.
இதனால்தான் ஜெயலலிதாவும் கூட தி.மு.கவின் கொள்கை அரசியலுக்காக பயப்படவில்லை. அவர் பயப்படுவது தி.மு.கவின் கார்ப்பரேட் வர்த்தக பலத்திற்குத்தான். அதையும் மீறி மக்கள் தமக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் அவர் இருக்கிறார்.
___________________________________________________
அடாவடி அழகிரியும், கோட்டு சூட்டு தயாநிதி மாறனும்தான் தி.மு.கவின் இன்றைய முகங்கள். தமிழனது சுயமரியாதையைக் காப்பாற்றுவோம் என்று முழங்கி தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த தி.மு.கவின் இன்றைய வடிவமைப்பை உலகமயத்தின் தயவில், முதலாளிகள்தான் தீர்மானிக்கிறார்கள். தி.மு.கவின் பாதையில்தான் மற்ற கட்சிகளும் பயணிக்கின்றன. வர்த்தகத்தில் யார் பெரியவர் என்பதுதான் அவர்களுக்கிடையே உள்ள போட்டி.
அரசியல் என்பதை இப்படி இலாபம் பார்க்கும் தொழிலாக மாற்றியதைத்தான் இன்றைய சமூக அமைப்பு சாதித்திருக்கிறது. இந்த அமைப்பிற்குள் இருந்து கொண்டு தி.மு.க, அ.தி.மு.க என்று மாற்றி மாற்றி வாக்களிப்பது மூலம் நாம் எந்த பயனையும் அடையப்போவதில்லை என்பதோடு பெரும் துன்பங்களையும், துயரங்களையும்தான் சந்திக்கிறோம். எனவே நமது மாற்று பார்வை என்பது இந்த அமைப்பிற்கு வெளியே இருந்துதான் வரமுடியும். அதற்கு முதற் கண்ணாக இந்த தேர்தலை நாம் புறக்கணிக்க வேண்டும். வாக்களிப்பது ஒரு ஜனநாயகக் கடமை என்று காதில் பூ சுற்றுவார்கள். இல்லை இந்த போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்பதன் மூலமே நாம் உண்மையான ஜனநாயகத்தின் முதல் படியை எடுத்து வைக்க முடியும்.