26 Apr 2014

16-வது மக்களவைத் தேர்தல் 24/4/2014

16-வது மக்களவைத் தேர்தல் | காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகள் | 5 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 867 வாக்காளர்கள் | 60,818 வாக்குச் சாவடிகள் | தேர்தல் பணியில் சுமார் 3 லட்சம் அரசு ஊழி யர்கள் | பாதுகாப்புப் பணியில் 14 ஆயிரம் மத்திய பாதுகாப்புப் படைஉள்பட 1.43 லட்சம் பேர் | தேர்தல் களத்தில் 845 பேர் இதில் 55 பேர் பெண்கள் | வாக்கு எண்ணிக்கை மே 16-ம் தேதி | வாக்களித்தல், நமது ஜனநாயக கடமை .......அனைவரும் வாக்களிப்போம் ......நீங்கள் வாக்களித்து விட்டீர்களா ?பலத்த பாதுகாப்புக்கிடை.யே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. தமிழகம் முழுவதும் 14 ஆயிரம் மத்திய பாதுகாப்புப் படையினர் உள்பட 1.43 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
16-வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது. கடந்த 7-ம் தேதி தொடங்கி இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. கடைசிகட்ட வாக்குப்பதிவு மே 12-ம் தேதி நடத்தப்படுகிறது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 6-வது கட்டமாக இன்று (வியாழக்கிழமை) வாக்குப் பதிவு நடக்கிறது. மொத்தம் 117 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. 
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்தத் தேர்தலில் தமிழகத்தில் 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. அதிமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தும், திமுக, பாஜக தலைமையில் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன. 517 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 845 பேர் களத்தில் உள்ளனர். இதில் 55 பேர் பெண்கள். 
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் மொத்தம் 5 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 867 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்கள் 2 கோடியே 75 லட்சத்து 21 ஆயிரத்து 110 பேர். ஆண்கள் 2 கோடியே 75 லட்சத்து 18 ஆயிரத்து 298 பேர். மூன்றாம் பாலினத்தவர் 3,341 பேர். இந்தத் தேர்தலில் ஆண்களைக் காட்டிலும் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். 
மாநிலம் முழுவதும் 28,224 கட்டிடங்களில் 60,818 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில்1.32 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் பணியில் சுமார் 3 லட்சம் அரசு ஊழி யர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள், அடையாள மை, வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட பொருட் களை அனுப்பி வைக்கப்பட்டன.
தேர்தலை அமைதியாக நடத்தவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் 34,209 காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர், ஓய்வு பெற்ற காவலர்கள், முன்னாள் ராணுவத்தினர் 26,609 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்களை நியமித்து, வெப் கேமரா மூலம் வாக்குப் பதிவை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
தேர்தல் பாதுகாப்புப் பணியில் 1 லட்சத்து 16 ஆயிரம் போலீஸார், 27 ஆயிரம் சீருடை அணிந்த காவல்துறை அல்லாதவர்கள் என மொத்தம் 1.43 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர் களுடன் மத்திய ஆயுத பாதுகாப் புப் படையினர் 14 ஆயிரம் பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். 
தமிழகத்தில் வாக்காளர் களுக்கு பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்க, தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு இன்று காலை 6 மணி வரை அமலில் இருக்கும். வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு கருவிகள் சீலிடப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும். வாக்கு எண்ணிக்கை மே 16-ம் தேதி நடக்கிறது. அதுவரை வாக்குப் பெட்டிகள் வைக்கப்படும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும்.

No comments:

Post a Comment