7/5/2011
"தங்களுக்கு தனி பல்கலை அமைக்க வேண்டும்' என, சித்த, ஆயுர்வேதம்
உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறை டாக்டர்கள் போர்க்கொடி பிடித்துள்ளனர்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை நிர்வாகம், சித்த, ஆயுர்வேத மருத்துவத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் - அலோபதி டாக்டர்கள் இடையே நீர் பூத்த நெருப்பாக இருந்த மோதல், மீண்டும் புகையத் துவங்கியுள்ளது.
சித்த, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைப்படி மருத்துவம் செய்பவர்கள், "அலோபதி' எனப்படும் ஆங்கில முறைப்படி சிகிச்சை அளிக்கக்
கூடாது. மருந்து கட்டுப்பாட்டு சட்டத்தில், இதை அனுமதிக்கும் விதிகளை ரத்து செய்ய
வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் பிரகாசம், மாநில சுகாதாரத்
துறை செயலர் கிரிஜா வைத்தியநாதனை சமீபத்தில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் பட்டம் படித்தவர்கள், ஊசி போடலாமா, "ஸ்டெத்தஸ்'கோப் வைத்துக்கொள்ளலாமா, இங்கிலீஷ் மருந்துகளை எழுதிக் கொடுக்கலாமா என்பதே இப்போது பூதாகரமாக எழுந்துள்ள கேள்வி. "கூடாது' என்பது, எம்.பி.பி.எஸ்., படித்த டாக்டர்களின் வாதம்; "சட்டத்தில் இடம் உள்ளது; அனுமதிக்கலாம்' என்பது சித்த, ஆயுர்வேத மருத்துவர்களின் வாதம்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், தமிழகம் முழுவதும் போலி டாக்டர்கள் வேட்டையாடப்பட்டனர். அரைகுறையாகத் தெரிந்து கொண்டு, கிளினிக் நடத்திய கம்பவுண்டர்கள், நாட்டு மருத்துவர்கள், கூட்டம் கூட்டமாக கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 2,000 பேரில், முறைப்படி கல்லூரிகளில் படித்து பட்டம் வாங்கிய சித்த, ஆயுர்வேத மருத்துவர்களும் சிக்கிக் கொண்டனர். இவர்கள் ஆங்கில மருத்துவ (அலோபதி) முறை மூலம் சிகிச்சை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
சித்த, ஆயுர்வேத மருத்துவ பட்டதாரிகள் , நியாயம் கேட்டு கோர்ட்டுக்குச் சென்றனர். "நாங்கள் கல்லூரிகளில், ஆங்கில மருத்துவ முறைகளைப் படிக்கிறோம். எனவே, அவசர சிகிச்சைக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க எங்களை அனுமதிக்க வேண்டும்' என்று வாதிட்டனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், "பட்டம் படித்த சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள், அலோபதி மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கலாம், ஏன் அறுவை சிகிச்சை கூட செய்யலாம்' என்று பச்சைக் கொடி காட்டினர்.
அதேவேளை, இந்திய டாக்டர்கள் சங்கமும் கோர்ட்டுக்குச் சென்று, இந்த
தீர்ப்புக்குத் தடை உத்தரவு பெற்றது.
இதன் தொடர்ச்சியாக, சித்த, ஆயுர்வேதம்,யுனானி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ பட்டப் படிப்பில் உள்ள ஆங்கில மருத்துவ முறைபாடத் திட்டத்தில் சில பகுதிகளை நீக்க, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவபல்கலை உத்தரவிட்டது. ஆனால், பாடத்திட்டத்தை நீக்க, இந்திய முறை மருத்துவத்துக்கான மத்தியக் குழு ஆட்சேபித்ததால், பாடத் திட்டத்தை நீக்கும் முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது பல்கலை. மருத்துவ பல்கலையின் நடவடிக்கை, இந்திய மருத்துவ முறை டாக்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சித்த, ஆயுர்வேத மருத்துவம் படித்துவிட்டு அலோபதி மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பது சரியா என்று சித்த மருத்துவர் சிவராமனிடம் கேட்டபோது, "எப்போதாவது அவசர நிலையில், அலோபதி மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க நாங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளோம். ஆனால், அதையே வழக்கமாக கொள்ளக் கூடாது. அதற்காக, "ஸ்டெத்தஸ் கோப்' வைத்துக் கொள்ளக் கூடாது, "தெர்மா மீட்டர்' கூடாது என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. "ஸ்டெத்தஸ்கோப்',"ஸ்கேன்', "எக்ஸ் ரே' போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளை ஒரு குறிப்பிட்ட மருத்துவத்தினர் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது' என்றார்.
பாடத் திட்டத்தை நீக்குவது குறித்து, இந்திய மருத்துவ முறைகளுக்கான மத்திய குழு உறுப்பினர் முத்துக்குமாரிடம்கேட்டபோது,"உடற் கூறுயியல், மருந்தியல், நோய்க்குறி குணங்கள் என்பன உள்ளிட்ட பாடத் திட்டங்கள் எல்லா மருத்துவத்துக்கும் பொதுவானது. வருங்காலத்தில் ஒருங்கிணைந்த மருத்துவம்தேவைப்படுவதால் அடிப்படை விஷயங்களை கற்றுக்கொள்வதில் தவறில்லை. பாடத் திட்டத்தில்
மாற்றம் செய்ய பல்கலைக்கு அதிகாரமில்லை. கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ
பல்கலைக்கழகம் சித்த, ஆயுர்வேதம் போன்ற மாற்று மருத்துவத்தினரிடம் மாற்றாந்தாய்மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. எனவே, எங்களுக்கு தனியாக பல்கலை வேண்டும்' என்றார்.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் பிரகாசம் கூறும்போது, "மாற்று மருத்துவத்தை குறைத்து மதிப்பிடவில்லை. சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில், இந்தக் காலத்துக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டியது எவ்வளவோ உள்ளது. அதைச் செய்யாமல் அலோபதி மருத்துவத்தில் ஆர்வம் காட்டுவது எங்களுக்கும் பிரச்னை, அவர்களுக்கும் பிரச்னை' என்றார்.
பல்கலையை கேள்வி கேட்க யாருக்கும்அதிகாரம் இல்லை:
சித்த, ஆயுர்வேத மருத்துவர்களின் குற்றச்சாட்டு குறித்து, மருத்துவ பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் கூறியதாவது: இந்திய மருத்துவமுறைகளுக்கான பாடத் திட்டத்தில் இருந்து, அலோபதி பாடங்களை நீக்கியதாககூறப்படுவதில் துளியும் உண்மை இல்லை. தேவைக்கேற்ப, பாடத் திட்டத்தில் அவ்வப்போது மாற்றங்கள் செய்வது வழக்கமான நடைமுறை தான். இதற்காக தனி குழுக்கள் உள்ளன. அந்தக் குழுக்கள் தான் முடிவு செய்யும். ஆனால், பல்கலையின் அதிகாரம் குறித்து கேள்வி கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை. சித்த, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை டாக்டர்களிடம், ஒருபோதும் நான் மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் நடந்து
கொள்ளவில்லை. எல்லோரையும் சமமாகவே பாவிக்கிறேன். தனி பல்கலை கேட்பது அவர்களது உரிமை. கடந்த ஆட்சியில் இது கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கேட்டுப் பெறட்டும்; வாழ்த்துகள்! இவ்வாறு மயில்வாகனன் கூறினார்.
- நமது
சிறப்பு நிருபர் -
No comments:
Post a Comment